×

11 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை: மகன் கவுதம் சிகாமணியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்

சென்னை: கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி 2வது நாளாக நேற்று மாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அப்போது அவரது மகன் கவுதம் சிகாமணி எம்பியும் ஆஜராகி விளக்கம் அளித்தார். இருவரிடமும் நேற்று நள்ளிரவு வரை விசாரணை நீடித்தது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள பொன்முடி, கடந்த 2006-2011ம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது, செம்மண் வெட்டி எடுக்க டெண்டர் விட்டதில் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக, அப்போதைய ஜெயலலிதாவின் அதிமுக அரசில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி எம்பி உள்ளிட்டவர்கள் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த வழக்கில், திடீரென சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை சைதாப்பேட்டை நகர் காலனியில் உள்ள வீடு, விழுப்புரம் புதுச்சேரி சாலை, கிழக்கு சண்முகபுரத்தில் உள்ள வீடு, பொன்முடி மகன் கவுதம் சிகாமணியின் வீடு, அவரது உதவியாளர்கள் வீடு, விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரி, விழுப்புரம் ரங்கநாதன் வீதியில் உள்ள கயல் பொன்னி நிறுவனம் என 9 இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் இடையே சென்னை நகர் காலனியில் இருந்த அமைச்சர் பொன்முடியை இரவு 8.30 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். பிறகு இரவு 9 மணியில் இருந்து சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நேற்று அதிகாலை 3.30 மணி வரை விடிய விடிய அதாவது மொத்தம் 20 மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார். அந்த பதிலை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு ெசய்து கொண்டனர். பிறகு நேற்று மாலை 4 மணிக்கு மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி அமைச்சர் பொன்முடியை அனுப்பி வைத்தனர்.

மேலும், பொன்முடியின் மூத்த மகன் கவுதம் சிகாமணி எம்.பிக்கு தனியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர். அதைதொடர்ந்து, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மூத்த மகன் கவுதம் சிகாமணி எம்.பி ஆகியோர் நேற்று 4 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது கவுதம் சிகாமணியை அதிகாரிகள் 3வது மாடியில் உள்ள அறை ஒன்றில் வைத்து விசாரணை நடத்தினர். அதேபோல், அமைச்சர் பொன்முடியை 6வது மடியில் உள்ள உயர் அதிகாரி அறையில் வைத்து 2வது நாளாக விசாரணை நடத்தினர்.

இருவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, அமைச்சர் பொன்முடியுடன் மருத்துவர் ஒருவர் அவரது வழக்கறிஞரான சரவணன் ஆகியோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. கவுதம் சிகாமணியிடம் கடந்த 2020ம் ஆண்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட அந்நிய செலாவணி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் கவுதம் சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி இருந்தனர். எனவே, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கவுதம் சிகாமணியிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம், அமைச்சர் பொன்முடியிடம் கடந்த 2006-2011ம் ஆண்டு கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது, 5 செம்மண் குவாரிகள் தனது மகன் உட்பட உறவினர்களுக்கு வழங்கியதாகவும், இதனால் அதன் தொடர்பான கணக்கு வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பொன்முடி தனது பணிக்காலத்தில் வழங்கப்பட்ட செம்மண் டெண்டர்கள் குறித்து தொடர்பான அனைத்து விபரங்களும் அதிகாரிகளுக்கு தெளிவாக விளக்கியதாகவும், அதை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்ததாக கூறப்படுகிறது.

இரண்டாவது நாளாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணியிடம் இரவு 10 மணி வரை, சுமார் 6 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேநேரத்தில் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வழக்கு தொடர்பான ஆவணங்கள், ரூ.81.7 லட்சம் ரொக்கம் அதில் இங்கிலாந்து நாட்டின் பவுண்ட், ரூ.41.9 கோடி நிரந்தர வைப்பு தொகை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 11 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடியிடம் 2வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை: மகன் கவுதம் சிகாமணியும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார் appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Minister ,Ponmudi ,Jayalalithaa ,Gautam Chikamani ,Chennai ,
× RELATED ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை