×

குருமலை மலை கிராமத்தில் நோயாளியை தொட்டி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்: மருத்துவ வசதி ஏற்படுத்தி தர மலைவாழ் மக்கள் கோரிக்கை

 

உடுமலை: அமராவதி வனச்சரக பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். மலைவாழ் கிராமங்களுக்கு வனத்துறை சார்பில், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், மருத்துவ வசதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

இந்த கிராமங்களில் அவ்வப்போது, சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றாலும், அவசர தேவைக்கு சமவெளி பகுதிக்கு செல்லும் நிலைதான் உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு, குருமலை கிராமத்தில் பழனிச்சாமி என்பவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை தொட்டிலில் வைத்து, ஒரு கம்பத்தில் கட்டி தூக்கி சென்றனர். குடியிருப்பு பகுதியில் இருந்து குழிப்பட்டி வரை 6 கிமீ தூரம் பாறைகளில் நடந்து வந்து, அங்கிருந்து 9கிமீ தூரம் சாலை வழித்தடத்தில் நடந்து, பொன்னாலம்மன் சோலைக்கு தூக்கி சென்றனர்.

பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சை வரவழைத்து, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குருமலை கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு மட்டுமின்றி, மாவடப்பு, முள்ளுபட்டி ஆகிய கிராமங்களிலும் பல ஆண்டுகளாக இதே நிலைமை உள்ளது. எனவே, மலை கிராமத்தில் நிரந்தர மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குருமலை மலை கிராமத்தில் நோயாளியை தொட்டி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்: மருத்துவ வசதி ஏற்படுத்தி தர மலைவாழ் மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kurumalai Mountain Village ,Udumalai ,Amravati ,Kurumalai ,Mountain Village Tank ,Dinakaran ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு