×

ஜனசேனா கட்சி நிர்வாகி மீது தாக்குதல்: பெண் இன்ஸ்பெக்டர் மீது நடிகர் பவன்கல்யாண் புகார்

திருப்பதி: ஸ்ரீகாளஹஸ்தியில் ஜனசேனா கட்சி நிர்வாகியை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பதி எஸ்பியிடம் நடிகர் பவன்கல்யாண் மனு அளித்தார். ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தியில் கடந்த 12ம்தேதி ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து ஜனசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கட்சி நிர்வாகியை பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன்கல்யாண் நேற்று எஸ்பி பரமேஸ்வரிடம் மனு அளித்தார். பின்னர், எஸ்பி பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

ஸ்ரீகாளஹஸ்தியில் கடந்த 12ம்தேதி ஜனசேனா கட்சியினர் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது நிர்வாகியை காவல் துறையினர் தாக்கியதாக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன்கல்யாண் புகார் மனு அளித்துள்ளார். அதன் அடிப்படையில் உயர் அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடைபெற உள்ளது. தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளி விவரங்களின்படி, கடந்த 4 ஆண்டுகளில் ஆந்திர மாநிலம் முழுவதும் 26,099 பெண்கள் காணாமல்போய் உள்ளனர். அதே நேரத்தில் 23,394 பெண்கள் காவல்துறையால் அடையாளம் காணப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2,705 பேரை கண்டுபிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜனசேனா கட்சி நிர்வாகி மீது தாக்குதல்: பெண் இன்ஸ்பெக்டர் மீது நடிகர் பவன்கல்யாண் புகார் appeared first on Dinakaran.

Tags : Janasena ,Bavangleyan ,Tirupati ,Tirupati SP ,Srikalahasthi ,Janasena Party ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள...