×

தேவர்சோலை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

 

மஞ்சூர், ஜூலை 18: மஞ்சூர் அருகே தேவர்சோலையில் அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது தேவர்சோலை. பாலகொலா ஊராட்சிகுட்பட்ட இந்த பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தேவர்சோலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 50 மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படிக்கின்றனர். இந்நிலையில், இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், பாலகொலா ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்கள்.

இதைத்தொடர்ந்து, ஊராட்சி சார்பில் பள்ளிக்கு இரண்டு புதிய கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு வகுப்பறைகள் கட்டப்பட்டது. இந்த வகுப்பறை கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பிராங்க்ளின் தலைமை தாங்கினார். பாலகொலா ஊராட்சி துணை தலைவர் மஞ்சை மோகன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அஞ்சலி, தேவர்சோலை வார்டு உறுப்பினர் அன்னக்கொடி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா புதிய வகுப்பறை கட்டிங்களை திறந்து வைத்து பேசினார்.

தொடர்ந்து, கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நிலத்தை வழங்கிய தேவர்சோலை எஸ்டேட் உரிமையாளர் பாலாஜி ராவுக்கு பள்ளி சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், மாவட்ட கல்வி அலுவலர் கணேஷ், வட்டார கல்வி அலுவலர் கார்த்திக் மற்றும் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். முடிவில் பூபதி நன்றி கூறினார்.

The post தேவர்சோலை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Devarcholai Government School ,Manjoor ,Government Middle School ,Devarcholai ,Dinakaran ,
× RELATED கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள் தலைமை ஆசிரியை, ஆசிரியை சஸ்பெண்ட்