×

சோமவார ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்: நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்

காஞ்சிபுரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய கோயில்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது. மேலும், சோமவார ஆடி அமாவாசையை முன்னிட்டு சுமங்கலி பெண்கள் உட்பட ஏராளமானோர் அரச மரத்தை வலம் வந்து வணங்கி வழிபட்டனர். அமாவாசை தினங்களில் மறைந்த மூதாதையர்கள் தங்கள் சந்ததியினர்களின் வேண்டுதல்களை, வழிபாடுகளை ஏற்க பூவுலகம் வருகின்றனர் என்பது ஐதீகம். மறைந்த பெற்றோருக்கு வருஷ திதி கொடுக்க மறந்து இருந்தாலும் மாத அமாவாசை விரதம் கடைபிடிக்காமல் இருந்தாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய 3 தினங்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

அதன்படி, ஆடி அமாவாசை அன்று இந்துக்கள் கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடி மறைந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து அவர்களின் ஆத்மா சாந்தியடைய அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவு பொருட்களை படையலிட்டு வழிபடுவார்கள். அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள சர்வதீர்த்தகுளம், கச்சபேஸ்வரர் குளம், தாயார் அம்மன் குளம், திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் குளங்களில் தர்ப்பணம் பக்தர்கள் தங்கள் முன்னோர்களை வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.

அதேபோன்று, இந்த வருடம் சோமவார அமாவாசையை முன்னிட்டு அரச மரத்தை, திருமாலாக நினைத்து 108 முறை வலம் வந்து, நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்பது நம்பிக்கை. அதன் அடிப்பைடயில் பக்தர்கள், சுமங்கலி பெண்கள் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் உள்ள அரச மரத்தடியில் உள்ள நாகதேவதைகளை சுற்றிவந்து வழிபாடு செய்தனர்.மாமல்லபுரம்: ஆண்டு தோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் மக்கள் ஆடி அமாவாசை நாளான நேற்று அரிசி, தர்ப்பை, எள், உள்ளிட்ட பூஜைப்பொருட்களை கொண்டு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வணங்கி வருகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கடற்கரை கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள புண்டரீக புஷ்கரணி தெப்பக்குளத்துக்கு நேற்று காலை மக்கள் வந்தனர். பின்னர், அவர்கள் வரிசையில் நின்று உயிரிழந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

The post சோமவார ஆடி அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்: நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Darpanam ,Somawara Aadi Amavasa ,Kanchipuram ,Aadi Amavasai ,Kanchipuram district ,New Moon ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...