×

தமிழ்நாடு வடிவில் நின்று அசத்திய கோவில்பட்டி அரசு பள்ளி மாணவிகள்

கோவில்பட்டி, ஜூலை 18: கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வடிவில் நின்று அசத்தினர். 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க ஆலோசிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது, அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டது. அவரவர் மாநிலங்களுக்கு அவரவர் விரும்பிய பெயர்கள் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டுக்கு மதராஸ் என்ற பெயரே நீடித்தது. மதராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு எனும் பெயர் சூட்ட பல போராட்டங்கள் நடைபெற்றது.

தியாகி சங்கரலிங்கனார், மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கக் கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். 1957ல் மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் வைக்க திமுக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தது. பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் தோல்வியில் முடிவுற்றது. 1967ல் திமுக அரசு அமைந்தபோது ஜூலை 18ம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் அண்ணா பெரும்பான்மை ஆதரவுடன் தமிழ்நாடு என்று பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து 1968ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி அதிகாரப்பூர்வமாக மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுமென அறிவித்தார். அதன்படி கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவிகள், தமிழ்நாடு வடிவில் நின்று அசத்தினர். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்துமுருகன், மேனாள் ஓவிய ஆசிரியர் வேல்முருகன் உள்பட பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post தமிழ்நாடு வடிவில் நின்று அசத்திய கோவில்பட்டி அரசு பள்ளி மாணவிகள் appeared first on Dinakaran.

Tags : Asathya Kovilpatti Government School ,Tamilnadu ,Kovilpatti ,Govilpatti Govt Girls High School ,Tamil Nadu ,Tamil Nadu Day ,
× RELATED மீன்பிடிக்க நீர் நிலைகளில் தண்ணீர்...