×

கைக்குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

 

அரியலூர், ஜூலை 18: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கீழப்பழுவூர் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று கைகுழந்தையுடன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி நகரம், குன்று தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி பேச்சியம்மாள் (30). இவர் தற்போது அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் சுண்ணாம்பு கால்வாய் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த மே 20ம்தேதி இவர்களது 7 வயது மகளை, வீட்டின் உரிமையாளரின் மகன் பாலியல் தொந்தரவு கொடுத்தகாவும், இதுகுறித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிந்ததாக தெரிகிறது. மேலும், அத்துமீறலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேச்சியம்மாள் கடந்த ஜூன் 19ம்தேதி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி கீழப்பழுவூர் போலீசார் பேச்சியம்மாள் வீட்டுக்கு சென்று, புகார் மனுவை திரும்பக்கோரி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பேச்சியம்மாள் நேற்று தனது கைக்குழந்தை மற்றும் கணவர் லட்சுமணனுடன் மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து பேச்சியம்மாள், கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தபோது போலீசார் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி, வலுக்கட்டயமாக வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பேச்சியம்மாளை கடைசி வரை கலெக்டரை சந்திக்க விடாமல் போலீசார் தடுத்தனர். இச்சம்பவம் கலெக்டர் அலுலகம் முன் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

The post கைக்குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Ariyalur District Collector ,Keezapavuur ,Dinakaran ,
× RELATED அரியலூரில் முன்னேற்பாடு பணி ஆய்வு...