×

கர்நாடகாவில் ஏற்பட்ட நிலைமை தான் காஷ்மீர் முதல் குமரி வரை பாஜவுக்கு ஏற்படும்: ரெய்டுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்; திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: பாஜவுக்கு கர்நாடகாவில் என்ன நிலைமை ஏற்பட்டதோ? அந்த நிலைமை தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏற்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை சைதாப்பேட்டையில் நேற்று அளித்த பேட்டி: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஒன்றிய அரசின் நடவடிக்கையை நீங்கள் எல்லாம் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறீர்கள். மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம், ஒன்று கூடிய அந்த கூட்டத்திலே மு.க.ஸ்டாலின் ஒரு முழக்கத்தை எழுப்பினார். அதாவது, யார் பிரதமராக வேண்டும் என்பது அல்ல.

யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் முக்கியம் என்ற முழக்கத்தை என்றைக்கு அவர் முன் வைத்தாரோ அதிலிருந்து தொடர்ந்து ஒன்றிய அரசு, ஆளுநர் மூலமாக சில நெருக்கடிகளை கொடுத்து வந்தது. பாட்னாவில் நடைபெற்ற எதிக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பிய உடன், அதே வேகத்தில், அமலாக்க துறை மூலமாக செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடைபெற்றது. இப்போது அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று இருக்கிறது.

பாட்னாவில் கூடிய கட்சிகளைவிட பெங்களூருவில் அதிக எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகள் கூடியிருக்கின்றன. எதிர்கட்சிகளின் கவனம் கூட்டத்தில் செல்லாத வகையிலேயே, பொன்முடி வீட்டில் சோதனை நடத்துகிறார்கள். என்ன வழக்கு என்பதை அறிய அமைச்சர் பொன்முடியின் சட்ட ஆலோசகரான என்னையும் அமலக்காக துறை அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது போட்ட வழக்கு. ஜெயலலிதா இறந்து எத்தனை வருடம் ஆகிறது.
இதேபோல தான் கர்நாடகா மாநிலத்தில் டி.கே.சிவக்குமார் வீட்டை பல்வேறு சோதனைக்கு ஆளாக்கி பல நெருக்கடிகளை கொடுத்தார்கள். ஆனால், அவர் கர்நாடக சட்டமன்ற தேர்தலிலே இந்தியாவிலேயே அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ஆகவே, மோடி அரசு இது போன்ற நடவடிக்கை எடுத்தால், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, கர்நாடகாவில் என்ன நிலைமை ஏற்பட்டதோ, அந்த நிலைமை தான் ஏற்பட போகிறது. இன்னொரு 5 மாதம் தான் இவர்களின் ஆட்சி இருக்கிறது. ஒன்றிய அரசுக்கு கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது. எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்கக்கூடிய எல்லா சூழ்நிலையும் ஏற்பட்டு வரும் தருணத்தில், இருக்கின்ற எஞ்சிய காலத்தில் எதிர்க்கட்சிகளை நசுக்கலாம் என்றால், இன்றைக்கு பொன்முடியின் விவகாரம் அகில இந்திய விஷயமாக கர்நாடகாவில் நடைபெறக்கூடிய கூட்டத்திலே இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆளுநரும், ஒன்றிய அரசாங்கமும் எடுக்கும் நடவடிக்கை எங்களுக்கு கூடுதலான ஓட்டை பெற்று தரும் என்று நம்புகிறோம். செந்தில்பாலாஜி விவாகரத்தில் ஒன்றிய அரசுக்கு தான் பின்னடைவு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கர்நாடகாவில் ஏற்பட்ட நிலைமை தான் காஷ்மீர் முதல் குமரி வரை பாஜவுக்கு ஏற்படும்: ரெய்டுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்; திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Kumari ,Karnataka ,Bajau ,DMK ,RS Bharati ,Chennai ,BJP ,Kanyakumari ,Baja ,RS Bharathi ,Dinakaran ,
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!