×

வேலூர் அருகே மாரியம்மன் கோயிலில் கைவரிசை; காணிக்கை பணம் திருடிக்கொண்டு 4 கி.மீ. தொலைவில் உண்டியல் வீச்சு: சிசிடிவியில் பதிவான முகமூடி ஆசாமிகளுக்கு வலை

வேலூர்: வேலூர் அருகே மகாசக்தி மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக்கொண்டு உண்டியலை 4 கி.மீ. தொலைவில் வீசிச்சென்ற சிசிடிவி கேமராவில் பதிவான முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த பெரிய சித்தேரியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து, 48 நாட்களாக மண்டல பூஜை ஓரிரு நாட்களில் நிறைவு பெற உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜைகள் முடித்து பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு பூசாரி அதிர்ச்சியடைந்தார். மேலும் கோயிலுக்குள் சென்று பார்த்தபோது, மர்ம ஆசாமிகள் உண்டியலை தூக்கி சென்றுள்ளனர். இதுகுறித்து அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர், கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நேற்று அதிகாலை 3.31 மணியளவில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் உண்டியலை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கோயிலில் இருந்து 4 கி.மீ தூரத்தில் துத்திப்பட்டு ரயில்வே தண்டவாளம் அருகே கோயிலில் திருடப்பட்ட உண்டியலை மர்ம ஆசாமிகள் வீசிவிட்டு பணத்துடன் தப்பி சென்றுள்ளனர். உண்டியலில் பக்தர்களின் கண்ணிக்கையாக சுமார் ₹20 ஆயிரம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி ஆசாமிகளை தேடி வருகின்றனர். மேலும் முகமூடி இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வேலூர் அருகே மாரியம்மன் கோயிலில் கைவரிசை; காணிக்கை பணம் திருடிக்கொண்டு 4 கி.மீ. தொலைவில் உண்டியல் வீச்சு: சிசிடிவியில் பதிவான முகமூடி ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Mariamman temple ,Vellore ,Mahashakti ,Mariamman ,
× RELATED இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்