×

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்…

நன்றி குங்குமம் ஆன்மிகம்

வழிபாட்டின் வேர்களைத் தேடி…2

Worship (வர்ஷிப்) என்ற சொல் கிரேக்கத்தில் உள்ள latreia (liturgy) என்ற சொல்லிலிருந்து தோன்றியது. இந்த சொல், தரும் பொருள் அனைத்துச் சமயத்திற்கும் பொதுவானதாகவே உள்ளது. இந்த சொல், இறைவன் தொடர்பான சடங்குகளையும் இறைச்சட்டங்களையும் இறை மதிப்பிற்குரிய செயல்பாடுகளையும் இறைவனுக்கு அளிக்கும் காணிக்கை, ஜெபம், தவம், பொதுமக்களோடு சேர்ந்து செய்யும் மிகப் பெரிய வழிபாடுகள் என்ற அனைத்தையும் குறிக்கும் பொதுச்சொல்லாக விளங்கியது. வழிபாடு என்பது பல அம்சங்களைக் கொண்டதாகும். இது ஒரு கூட்டுச் செயல்பாடு. ஒரு சமுதாயத்தில் ஒரு சிலர் தவிர்த்த ஏனையோர் பக்தி உடையவர்களாக கூட்டாக இணைந்து இறைவனைப் பாடிப் பரவித் துதிப்பது வழிபாடு ஆகும்.

அவ்விடத்தில் இறைவனின் இருப்பு உணரப்படுகிறது, உணர்த்தப்படுகிறது. இறைவனுடன் தொடர்பு கொள்ளுதல் என்ற வகையில் தனிநபர் வழிபாடும் இறைவனைப் பற்றி மக்களோடு தொடர்பு கொள்ளுதல் என்ற பொருளில் பொது வழிபாடும் நிகழ்கின்றது. பொது வழிபாடு என்பது திருவிழா, சடங்குகள், யாகம், பூஜை போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இதில் மக்களின் கூட்டுப் பங்கேற்பு காணப்படும். ஒரு தெருவில் பங்குனி பொங்கல் கொண்டாடுகிறார்கள் என்றால் அந்த தெருவினர் அனைவரது வீட்டில் இருந்தும் வரி பிரித்து பொங்கல் விழாவிற்கு உரிய செலவைச் செய்வார்கள். எனவே அந்த தெருவைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் அந்த பொது வழிபாட்டில் ஒரு பங்கும் பொறுப்பும் உண்டு.

பெருவிழாக்கள் ஊர், மாவட்டம், மாநிலம் என்று பெரிய அளவில் பொது நோக்கத்துக்காக உலக நன்மைக்காக நடத்தப்படும். சத்ரு சம்கார பூஜை, உலக சேம பூஜை, போன்றவற்றில் பணக்காரர்களின் பங்களிப்பு நிதி வழங்குவதில் அதிகமாக இருக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் யாகங்கள் நடைபெறும் இடத்திற்கு வந்து அங்கிருந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு செல்வதோடு யாகங்களுக்கு உரிய ஆகுதிகளை தம்மால் இயன்ற அளவுக்கு வழங்குவர்.

ஆக சமூக நன்மைக்கு யாகங்கள் நடத்தப்படும்போது செல்வரும் எளியவரும் நடுத்தர மக்களும் தத்தம் பங்கினைச் செலுத்துவது உண்டு. இதுவும் பொது நல நோக்குடைய வழிபாட்டு முறை ஆகும்.வரைமுறைக்குட்பட்ட வழிபாடு என்பது கோயில் அல்லது வேறு ஏதேனும் வழிபாட்டுத் தலங்களில் நடைபெறுகிறது. இவ்வழிபாட்டில் ஒருவர் அல்லது சிலர் இறைவனுக்குரிய பூஜைகளை செய்வார்கள். வேறு சிலர் அல்லது வேறொருவர் இறைவனைப் பற்றிய துதிப்பாடல்களைப் பாடுவார்.

அத்தலத்தில் அல்லது அந்த வழிபாட்டுக் கட்டிடத்தின் இன்னொரு பகுதியில் சத்சங்கம் அமைத்து இறைவனைப் பற்றிய கதைகளும் பக்தியின் மேன்மையும் ஒருவரால் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறப்படும்.கோயில்களிலும், மடங்களிலும் இறைவனுக்கு அலங்கார அபிஷேகங்கள் நடைபெறும். பக்தர்கள் தங்களால் ஆன காணிக்கையைச் செலுத்துவார்கள்.

இறைவனுக்கு பூ, தேங்காய், பழம், பத்தி, மெழுகுவர்த்தி, அகல்விளக்கு என்று அவரவர் மரபுக்கேற்ப காணிக்கைப் பொருட்களும் பூஜைப் பொருட்களும் கொண்டு வந்து இறைவனுக்கு சார்த்தி மீண்டும் வீட்டுக்கு ஒரு பகுதியை எடுத்துச் செல்வர்.கோயில்களில் ஒருவர் இறைவனுக் குரிய பூஜைகளைச் செய்தாலும், அவரவர் வீட்டில் அந்தந்த வீட்டுப் பெரியவர்கள் மற்றும் பெண்கள் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் உறங்கப் போகும் முன்பும், வீட்டுப் பூசைகளைச் செய்வார்கள்.

வீட்டில் உள்ளவருக்குப் பிரசாதம் வழங்குவர். விபூதி பூசி விடுவர். தீப, தூப, நைவேத்தியங்களும் இருக்கும். விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, சத்ய நாராயண பூஜை போன்ற சிறப்பு நாள் வழிபாடுகளின் போது, பெண்களுக்கு அதிகளவில் வழிபாட்டு பணிகள் இருக்கும். பூஜை என்பது பூசை என்ற சொல்லின் திரிபு. பூவினால் செய்யப்படும் வழிபாடு பூஜை என பெயர் பெற்றது என்று விளக்கம் சொல்பவர்களும் உண்டு.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த மா மலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினையேன் நெஞ்சமே

என்ற பாடல் இறைவனை வாழ்த்துவதற்குத் தான் மனிதனுக்கு வாயும் இறைவனை நினைப்பதற்கு நெஞ்சும் இறைவனைத் தாழ்ந்து வணங்குவதற்கு தலையும் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறது. மேலும், இத்தகைய இறைவனை நல்ல மலர்களால் தூவித் துதியாமல் இத்தனை காலம் வீணே கழித்துவிட்டேனே என்று வருந்துவதாகவும் இப்பாடல் கருத்து அமைகின்றது. இவ்வாறு இறைவனை முழு மனதுடன் வழிபட்டால் அவன் வாழ்க்கை குளிர்ந்த பொய்கை போல் குளிர்ச்சியும் மலர்ச்சியுமாக விளங்கும். அங்கு தென்றல் வீசும். இசை தவழும். நிலவு ஒளிரும். இறைவழிபாட்டினால் இத்தனை இன்பங்களும் ஒருவனுக்குக் கிடைக்கும்.

மாசில் வீணையும்
மாலை மதியமும்
வீசு தென்றலும்
வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும்
போன்றதே ஈசன் எந்தன் இணையடி நீழலே

இறைவனுக்கு வழிபாடு செய்யும் போது, அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு பூசை செய்ய வேண்டும். இதனை நாள் மலர் என்பர். பழைய பூக்கள், வாடிய பூக்கள், வாசமில்லாத பூக்கள், உதிர்ந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு இறைவனுக்குப் பூசை செய்யக்கூடாது. புத்தம் புதிய மலர்களை இறைவனுக்குப் படைக்க வேண்டும்.

வேடன் திண்ணப்பன் தன் காட்டில் இருந்த சிவனுக்குக் காட்டு மலர்களைப் பறித்துக்கொண்டு வந்து பூசை செய்ததாக பெரியபுராணம் கூறுகிறது. காட்டில் வசிப்பவனும் நாட்டில் நாகரிகமாக வாழ்பவனும் இறைவனுக்கு மலர்களைப் படைத்து வழிபடுதல் என்பது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வரும் ஒரு வழிபாட்டு முறையாகும். தனிநபர் வழிபாட்டில் ஒருவர் தன்னுடைய சுக துக்கங்களை இறைவனிடம் எடுத்துச் சொல்லி அதற்கான விடிவை அறிய முற்படுகிறார். அவற்றுக்கான தீர்வுகளை எதிர்பார்த்து மன்றாடுகிறார்.

இதற்காக சில நேர்ச்சைகளையும் நேர்ந்து கொண்டு நான் இதைச் செய்கிறேன் நீ எனக்கு இதை செய் என்று பேரம் பேசுகிறார். இதற்கு மாறாக பெரிய அளவிலான வழிபாடுகள் நடக்கும்போது ஆன்மிகப் பெரியவர்கள் கூட்டத்தினரைப் பார்த்து உரை நிகழ்த்துகின்றனர். அப்போது தனி நபர் வழிபாட்டில் தேடிய விடைகள் அங்கு தாமாக வந்து காதில் விழுகின்றன. துக்கத்திற்கு என்ன காரணம் துக்கத்திலிருந்து நிவாரணம் பெறுவது எவ்வாறு என்ற வினாக்களுக்கு விடை கூறியது பௌத்த சமயம். துக்கத்திற்கு காரணம் முன்வினை என்ற பதிலை இந்து சமயம் எடுத்துரைக்கிறது. துக்க நிவாரணத்திற்கு ஒரே வழி கோயிலுக்கும், கோயில் சார்ந்தவர்களுக்கும் பற்பல உதவிகளை செய்வதாகும்.

மேலும் அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தானங்களையும் தருமங்களையும் செய்தால், இந்த பிறவியில் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் அடுத்த பிறவியில் தொடராமல் இருக்கும். ஏழைகளுக்குச் செய்கின்ற தர்மங்கள் தர்மவானின் கண்ணீரைத் துடைக்கும், என்று சில சமூக நலப்பணிகள் மற்றும் கோயில் பணிகள் பரிகாரங்களாக துக்க நிவாரண வழிமுறைகளாக இந்து சமயத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றைப் பெரிய கூட்டங்களில் ஆன்மிகப் பெரியவர்கள் எடுத்துரைக்கின்றனர்.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கும்போது, சமநிலை தோன்றுகிறது. சந்தோஷம் வருகின்றது. ஒருவருடைய வீட்டில் ஒரு பெண்ணுக்கு நீண்ட காலம் திருமணம் ஆகவில்லை என்றால், அவர்கள் ஏதேனும் ஒரு ஏழைப் பெண்ணுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்தால் தன் வீட்டுப் பெண்ணின் திருமண தோஷம் தீரும் என்று ஒரு பரிகாரம் சொல்லும் போது, அது சமூகத்திற்கு ஒரு நன்மையைச் செய்கின்றது.

உதவி செய்தவரின் துயரமும் தீர்ந்து போகின்றது என்ற வகையில் தனிநபருக்கும் சமூகத்துக்கும் என்ற இரு சாராருக்கும் நன்மை விளைவிப்பதாக இத்தீர்வுகளும் பரிகாரங்களும் அமைகின்றன. வழிபாடு என்பது செயல்பாடு சார்ந்ததாக எல்லா காலத்திலும் இருந்து வந்திருக்கின்றது. ஆதிகாலத்தில் மனிதன் தனக்குக் கிடைத்த தண்ணீரால் தன் வழிபடுபொருளைக் கழுவி அங்கிருக்கும் நறுமண மலர்களை அப்பொருளுக்குப் படைத்து நறுமணப் புகையூட்டி அதன் அருகில் இருந்து மகிழ்ந்தான்.

இதே முறையில்தான் இன்றைக்கும் எந்த கோயிலாக இருந்தாலும் அங்கு பூவும் புகையும் முக்கியமான இடத்தை பெறுகின்றது. இறைவனுக்கு பூச்சூட்டி, புகையூட்டி, உணவு படைத்து அவனையும் மனிதனாகப் பாவித்து தனக்கு என்னென்ன பொருட்கள் இன்பம் தருமோ, அவற்றையெல்லாம் தாம் வணங்கும் இறைவனுக்கு படைத்து மகிழ்கின்ற இயல்பு தொன்றுதொட்டு மனித சமுதாயத்தில் காணப்படும் நடைமுறை ஆகும். கி.பி 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் சீனாவுக்கு கடல்கடந்து சென்று அங்கு பௌத்த சமயத்தைப் பரப்பிய போது, பூவும் புகையும் பௌத்த சமயத்தில் நிலைபெற்றுவிட்டது. தமிழகத்தில் இருந்து ஜப்பான், சீனா, கொரியா சென்ற பூ மற்றும் புகை வழிபாடுகள் பற்றி தொடர்ந்து
காண்போம்.

தொகுப்பு: முனைவர் செ. ராஜேஸ்வரி

The post வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும்… appeared first on Dinakaran.

Tags : Saffron ,Greece ,Dinakaran ,
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்