×

கடந்த 1 மாதத்துக்கு முன்பு திறக்கப்பட்ட ராமநதி அணையில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான குளியல்: நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்குமா?

கடையம்: கடந்த 1 மாதத்துக்கு முன்பு திறக்கப்பட்ட ராமநதி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர். இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகியுள்ளதால் நீர்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடையம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. அதேபோன்று கடையம், தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர் உள்ளிட்ட மக்களின் சுற்றுலாதலமாக ராமநதி அணை விளங்கி வருகிறது. இதை தவிர்த்து வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ராமநதி அணை மூடப்பட்டது. இதை தொடர்ந்து அணை நுழைவு வாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் அங்கு செல்லாமல் இருந்தனர்.

கொரோனா ஊரடங்கு தளர்த்திய பிறகும் ராமநதி அணை சுற்றுலா பயணிகள் செல்ல தடை இருந்தது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் ராமநதி அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து கடந்த 1 மாதத்துக்கு முன்பு தான் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் வார விடுமுறை நாட்களில் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று விடுமுறை என்பதால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ராமநதி அணை வனப்பகுதியில் குவிந்தனர். கார், வேன், பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்ததால் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அணையின் மேல் பகுதியில் உள்ள நீரோடையில் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் அணையின் உட்பகுதியில் யாரும் குளிக்க கூடாது என்று நீர்வளத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளது.

ஆனால், அதனையும் மீறி அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் ஆபத்தமான முறையில் குளித்து வருகின்றனர். இதனால், சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ராமநதி அணையில் பாதுகாப்பாக குளிக்கும் வகையில் ஒழுங்குபடுத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

சோப்பு, ஷாம்பு பயன்படுத்தும் அவலம்
ராமநதி அணையின் மேலே உள்ள நீரோடை பகுதியில் சட்ட விரோதமான செயல்கள் நடைபெற்றன. மது பாட்டில்கள், சோப்பு, ஷாம்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டு வனவிலங்குகளுக்கு பாதிக்கப்படுவதை தொடர்ந்து ராம நதி அணை மூடப்பட்டது. தற்போது கடந்த ஒரு மாத காலமாக ராமநதி அணை செல்லும் வழியில் உள்ள மூன்று கதவுகளும் திறந்து கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகள் ராமநதி அணை நீரோடை பகுதிகளில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மது அருந்திவிட்டு பாட்டில்களை பாறையில் போட்டு உடைக்கின்றனர். இதனால் குளிப்பவர்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் வலம் வரும் வனவிலங்குகளுக்கு தொந்தரவு உள்ளது. சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் குப்பைகள் மற்றும் பழைய துணி மணிகள் ஓடை பகுதியில் வீசப்படுகின்றன. அவர்கள் பயன்படுத்தும் ஷாம்பு, சோப்பு ஆகியவற்றால் நீர் மாசடைந்து வருகிறது.

எனவே, மது பாட்டில்கள், சோப்பு, ஷாம்பு கொண்டு செல்ல தடை விதித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இதன் மூலம் நீர் மாசுபடுவதை கட்டுப்படுத்தலாம். வனவிலங்குகள் பாதிக்கப்படாது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

The post கடந்த 1 மாதத்துக்கு முன்பு திறக்கப்பட்ட ராமநதி அணையில் சுற்றுலா பயணிகள் ஆபத்தான குளியல்: நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்குமா? appeared first on Dinakaran.

Tags : Ramanadi dam ,Water Department ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் ஜூன் 13, 14-ல்...