×

வழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது

திருச்சி: கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி அஜிதா. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் சென்டர் மீது விபசார தடுப்பு பிரிவு போலீசார் அனுமதியின்றி மசாஜ் சென்டர் நடத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் விபசார தடுப்பு பிரிவு எஸ்ஐ ரமா(53) அஜிதாவை தொடர்பு கொண்டு, வழக்கை உங்களுக்கு சாதகமாக முடிக்க குற்றப்பத்திரிகையில் தேவையான மாற்றங்களை செய்து சமர்ப்பிக்கிறேன். அதற்கு ரூ.10,000 தர வேண்டுமென கேட்டுள்ளார். இதற்கு அஜிதா தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதால், தன்னால் தற்போது அவ்வளவு பணம் தர முடியாது என்று கூறி உள்ளார்.

இதையடுத்து எஸ்ஐ ரமா, லஞ்சம் தராவிட்டால் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்து விடுவதாக அஜிதாவை மிரட்டி உள்ளார். மேலும் லஞ்சத்தை ரூ.3 ஆயிரமாக குறைத்து கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத அஜிதா திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரைப்படி இன்று காலை கன்டோன்மென்ட்டில் உள்ள விபசார தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் அஜிதா ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் நோட்டுகளை எஸ்ஐ ரமாவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருச்சி மாநகரில் 60 ஸ்பா சென்டர்கள் இயங்கி வருகின்றன. ஒரு ஸ்பா சென்டருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எஸ்ஐ ரமா கூகுள் பே மூலம் தனது வங்கி கணக்கில் பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனது உயர் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் லஞ்ச பணத்தை பிரித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள எஸ்ஐ ரமாவின் வீட்டிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post வழக்கை சாதகமாக முடித்து தருவதாக கூறி மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது appeared first on Dinakaran.

Tags : SI ,Trichy ,Sarath ,Kerala State Kottayam ,ajita ,Sinn Bus Station ,Dinakaran ,
× RELATED டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் பதுக்கிய 2 பேர் கைது