×

நிர்வாகிக்கு மண்டை உடைப்பு; கவுன்சிலர் வீடு மீது தாக்குதல் லாரி உரிமையாளரிடம் மாமூல் வாங்குவதில் பாஜவினர் மோதல்: வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு

உடுமலை: லாரி உரிமையாளரிடம் மாமூல் வாங்குவதில் பாஜவினர் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை சேர்ந்தவர் அருண் பிரசாத் (36). பாஜ திருப்பூர் தெற்கு மாவட்ட ஐடி விங் செயலாளர். இவரும், இவரது நண்பரும், பாஜ பிரமுகருமான ஜெகன் (25) என்பவரும் உடுமலை ஐயிலை மீனாட்சி நகர் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பாஜ உடுமலை வடக்கு ஒன்றிய செயலாளரும், உடுமலை ஒன்றிய குழு 4வது வார்டு கவுன்சிலருமான நாகமாணிக்கம் என்பவர் உள்பட 7 பேர் அங்கு வந்தனர். அவர்கள் இரும்பு பைபால் அருண் பிரசாத்தை தாக்கிவிட்டு தப்பினர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உயிருக்கு போராடிய அருண் பிரசாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் மூன்று தையல்களும், இடுப்பு பகுதியில் இரண்டு தையல்களும் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று அருண்பிரசாத்திடம் விசாரணை நடத்தினர். அதில், திருப்பூரில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிமங்களை எடுத்து செல்லும் கேரளா லாரி உரிமையாளரிடம் பணம் வாங்கியது சம்பந்தமாக அருண்பிரசாத்தும், நாகமாணிக்கமும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவருக்கும் இடையே மோதல் நடந்திருக்கலாம் என்று தெரியவந்து உள்ளது.

இந்நிலையில், அருண் பிரசாத்திடம் நாகமாணிக்கும் பேசும் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோ விவரம்: கவுன்சிலர் நாகமாணிக்கம்: அருணே உண்மைய சொல்றேன் கேட்டுக்கோ. உன்கிட்ட சொல்றேன். அந்த மலையாயத்து காரனுங்க வந்தாங்க.. நான் ஒரு நாள் போயிருந்தேன் நம்ம கண்ணயர் ஆபீசுக்கு.. நீ பதிவு பண்ணாலும் சரி.. நான் உண்மைய சொல்றேன். அருண் பிரசாத்: இல்லைங்க.. மலையாத்து காரனுங்க சொன்னாங்க… நான் கண்ணயர் ஆபீசுக்கு போனேன்.. கவுன்சிலர் நாகமாணிக்கம்: மலையாத்து காரனுங்க தான் தம்பி என்ன பண்ணாங்கனு கேளுங்க. ரூ.15 ஆயிரத்தை கண்ணயர்கிட்ட கொடுக்குறான். அவன் மலையாம் கலந்துதான் பேசுறான். வண்டி வந்தா உங்க கட்சிக்காரங்கதான் பிடிப்பாங்களாமா… சத்தம் போடுவாங்களாமா.. அதுக்கு இந்த ரூ.15 ஆயிரத்தை வெச்சுங்கோங்க.. மாசம்மாசம் ரூ.15 ஆயிரத்தை உங்க அக்கவுன்ட்ல போட்டு விட்டுடுறேன். அருணு இதலாம் உண்மை. அப்புறம் நீ எப்படி வேணும்னாலும் நினைச்சுக்கோ. அருண் பிரசாத்: இல்ல… இல்ல… அதேதான் அவனும் சொன்னான். கவுன்சிலர் நாகமாணிக்கம்: அதேதான் சொல்றேன். புரிஞ்சிக்கோ. ரூ.15 ஆயிரத்தை கொடுக்குறேன்… போட்டுக்கோங்கனு சொல்லி என்முன்னால்தான் கொடுக்குறான். நீ எங்க வேண்டுமானாலும் கூப்பிடு நான் சொல்றேன். ரூ.15 ஆயிரத்துல எனக்கு ரூ.3 ஆயிரம். தெற்கு மாரியப்பனுக்கு ரூ.3 ஆயிரம், ஐயப்பனுக்கு ரூ.3 ஆயிரம். ரூ.9 ஆயிரம் போன ரூ.15 ஆயிரத்துல எவ்வளவு மீதிருக்கும் ரூ.6 ஆயிரம். இந்த ரூ.6 ஆயிரத்த கனா எடுத்துட்டு போயிருச்சு..அருண் பிரசாத்: சரி..சரிங்க..கவுன்சிலர் நாகமாணிக்கம்: ஒரே ஒரு மாசம் தம்பி அவங்க கொடுத்தது.

அந்த பணத்த ஏன் வாங்குனேன்னா நம்ம எவ்வளவு கட்சிக்கு செலவு பண்றோம். நம்மலும் ஒரு மிடில்பார்டிதான். கொடுத்தா வாங்கி உதரிபோட்டு போறவன்தானா கட்சிக்காக.. செலவு பண்ணியே இறைச்சவங்க. இப்பயும் செலவு பண்ணிட்டுதானே இருக்கோம். அது வேற பிரச்னை. இந்த ரூ.3 ஆயிரம் வரபிரசாதாம கிடைச்சது. நம்ம கட்சிக்கு செலவு பண்றோம்ல… இந்த ரூ.3 ஆயிரம் மாசம்மாசம் கிடைக்குனு நினைச்சோம். அது கிடைக்கல.. ஒரு மாசத்தோட போச்சு.. இந்த மாசம் கொடுத்தது அவனும் உங்களுக்கு சொல்லல… நீங்களும் அவன் பிடிக்க.. ஊரே பிரச்னையா ஆகிடுச்சு… அருண் பிரசாத்: நான் அவன் கேட்கபோது நான் எத்தன தடவ கண்ணயர் ஆபீசுக்கு போயிருக்கேன் தெரியுமா. கூகுள் பேல எவ்வளோ அனுப்பி இருக்கனு தெரியுமா கேட்குறான். இவ்வாறு இந்த உரையாடல் முடிகிறது. இதற்கிடையே, கவுன்சிலர் நாகமாணிக்கத்தின் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் கல்வீசி உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நாகமாணிக்கம் தரப்பினர் அருண் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் அளித்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post நிர்வாகிக்கு மண்டை உடைப்பு; கவுன்சிலர் வீடு மீது தாக்குதல் லாரி உரிமையாளரிடம் மாமூல் வாங்குவதில் பாஜவினர் மோதல்: வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bajavinar ,Udumalai ,Bajaviner ,Mamuel ,Tiruppur District, Udumalai ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்