×

வியாபாரிகள் வேதனை கோயம்பேட்டில் பூக்கள் விலை சரிவு: ஒரு கிலோ மல்லி ரூ.350

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீரென சரிந்துள்ளது. இன்று அமாவாசை என்பதால் பூக்களின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒசூர், திண்டுக்கல், மதுரை, வேலூர், நிலக்கோட்டை, திருச்சி, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து, மல்லி, முல்லை, கனகாம்பரம், சாமந்தி உள்பட பல பூக்கள் லாரிகள் மூலம் வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.500க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.360க்கும், கனகாம்பரம் ரூ.300க்கும், சாமந்தி ரூ.200க்கும், சம்பங்கி ரூ.80க்கும், அரளி ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று காலை மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.350க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி, கனகாம்பரம் ரூ.300க்கும், சாமந்தி ரூ.160க்கும், சம்பங்கி, பன்னீர் ரோஸ் ரூ.60க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.80க்கும், அரளி பூ ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று காலை அனைத்து பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இன்று ஆடி அமாவாசை என்பதால் அனைத்து பூக்களின் விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். அமாவாசையை முன்னிட்டு மீண்டும் பூக்களின் விலை உயரலாம்’’ என்றார்.

The post வியாபாரிகள் வேதனை கோயம்பேட்டில் பூக்கள் விலை சரிவு: ஒரு கிலோ மல்லி ரூ.350 appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Chennai ,Koyambedu ,Koimbatore ,
× RELATED வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த...