×

ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை இன்று கொண்டு செல்லப்பட்டது

 

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு வஸ்திர மரியாதை இன்று (16ம் தேதி) கொண்டு செல்லப்படுகிறது.மொகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது அவர்களிடம் நம்பெருமாள் விக்ரகங்கள் சிக்காமல் இருக்க, திருப்பதி மலையில் விக்கிரகங்கள் 50 ஆண்டுகள் வைத்து பாதுகாக்கப்பட்டது.

இதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு ஆடி 1ம் தேதி வஸ்திர மரியாதை செய்யப்பட்டு வருகிறது.இதன்படி ஆடிமாத துவக்கத்தையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும் வஸ்திரங்கள், குடைகள், அனைத்து வகை மலர்கள், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அனைத்தும் பெரிய தட்டுகளில் கோயில் கருடாழ்வார் மண்டபத்தில் நேற்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

பின்னர், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானை மீது ஒரு தட்டை வைத்தும், மற்ற தட்டுகளை அதிகாரிகள், கோயில் ஊழியர்கள் கைகளில் எடுத்துக்கொண்டும் உத்திர வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் மங்கல பொருட்களை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று காலை (16ம் தேதி) மங்கல பொருட்களை திருப்பதிக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், அறங்காவலர்கள் குழு தலைவர், மேலாளர், அறங்காவலர்கள் மற்றும் அர்ச்சகர்கள், பட்டர்கள் கலந்துகொள்கின்றனர். இவர்கள் ஆடி முதல் தேதியன்று (17ம் தேதி) திருப்பதி வெங்கடாசலபதிக்கு இந்த மங்கல பொருட்களை வழங்குவர்.

The post ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து திருப்பதி ஏழுமலையானுக்கு வஸ்திர மரியாதை இன்று கொண்டு செல்லப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Vestri ,Srirangam temple ,Tirupati Etummalayan ,Tirupati Venkatachalapati temple ,Tirupati Esumalayan ,
× RELATED மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு...