×

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு: தேவஸ்தானம் அறிவிப்பு

கேரளா:ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சபரிமலையில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் முன்பதிவு மூலமாகவே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்படும். அதன்படி ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. ஆடி மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ் ரகலசாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும். 21-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜையையொட்டி பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

The post ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Iyappan Temple walk ,Audi Month Puja ,Kerala ,Sabarimalai ,Adi Month Pooja ,Iyappan Temple ,Audi Month Pooja ,Devasthanam ,Dinakaran ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு