×

சீமான், டிடிவி தினகரனுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் 3வது அணி அமைக்க முடிவு

சென்னை: பாஜக கைவிட்டதால் அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், சீமான், டிடிவி தினகரனுடன் இணைந்து 3வது அணி அமைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக முதல் கட்டமாக பாஜ மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை தீவிரமாக எதிர்க்கவும் முடிவு செய்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், பாஜகவை பெரிதும் நம்பியிருந்தார். ஆனால் பாஜகவோ எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகிய 3 பேரையும் ஒரே தட்டில் வைத்து பார்த்து வந்தது. தேர்தல் நெருங்கியதும், பன்னீர்செல்வத்தை கழட்டி விட ஆரம்பித்து விட்டது. எடப்பாடி பழனிச்சாமியுடன்தான் கூட்டணி என்று முடிவு செய்து விட்டது. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவு தெரிவித்தது.

அதேநேரத்தில் கட்சி மற்றும் சின்னம் விவகாரத்திலும் பாஜக எந்த உதவியும் செய்யவில்லை. இதனால் பாஜ மீது கடும் அதிருப்தி இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வருகிறார். மேலும் பாஜ மேலிடத்தை சந்தித்து கூட்டணி குறித்து முடிவு செய்ய பல முறை முயன்றும் அவருக்கு அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பன்னீர்செல்வம் தவித்து வருகிறார். கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு கூட பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதேநிலையில்தான் டிடிவி தினகரனும் உள்ளார். இவர்கள் இருவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறினாலும் அவர் ஏற்றுக் கொள்ளாததால், பாஜக இருவரையும் கைவிட்டு விட்டது.

இதனால் இருவரும் தற்போது இணைந்துள்ளனர். இவர்கள் தனித்து விடப்பட்டுள்ளதால், என்ன செய்வது என்று இருவரும் ஆலோசித்து வருகின்றனர். இந்தநிலையில், சீமானுடன் இணைந்து 3வது அணி அமைப்போம் என்று பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தத் தொடங்கிவிட்டனர். பல மாவட்டங்களில் 10 சதவீதம் வரை ஓட்டுக்களை சீமான் வைத்துள்ளார். இதனால் சீமானுடன் கூட்டணி சேர்ந்தால், தென் மாவட்டங்களில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக 2வது இடத்தைப் பிடிக்கலாம். அதிமுக மற்றும் பாஜ கூட்டணியை 3வது இடத்துக்கு தள்ளிவிடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக தேனியில் ரவீந்திரநாத், சிவகங்கை அல்லது ராமநாதபுரம், விருதுநகரில் டிடிவி தினகரன் ஆகியோரை நிறுத்தினால் பெரிய அளவில் ஓட்டுக்களை பிரித்து விடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனால் சீமானுடன் இணைந்து பணியாற்றுவது நல்லது என்றும் பன்னீர்செல்வத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் அவர் 3வது அணி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் சீமானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி தற்போதே கூட்டணியை தொடங்கி தமிழகத்தில் 3வது அணியை பன்னீர்செல்வம் உருவாக்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக பாஜகவுக்கு எதிராக தனது கருத்துக்களை பன்னீர்செல்வம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார். இனி வேகமாக பாஜகவை எதிர்ப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post சீமான், டிடிவி தினகரனுடன் இணைந்து ஓ.பன்னீர்செல்வம் 3வது அணி அமைக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Seeman ,DTV Dinakaran ,Panneerselvam ,Chennai ,O.J. Panneerselvam ,O.D. ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...