×

தமிழ்நாட்டுக்கு செய்துள்ள அநீதிக்கு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அம்பத்தூர்: தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு செய்துள்ள கேடுகளுக்கும், அநீதிகளுக்கும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மன்னிப்பு கேட்கவேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அம்பத்தூர் பகுதி திமுக சார்பில், கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை பாடியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு செங்கோலை பரிசாக வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், கர்ப்பிணிகள், கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசியதாவது: தமிழ்நாட்டை பொறுத்தவரை கலைஞருக்கு முன், கலைஞருக்கு பின் என்று பிரிக்கலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நேரமும் உழைக்கக்கூடியவர் நமது முதல்வர். கலைஞர் வழங்கிய தொலைக்காட்சி பெட்டி இன்றும் அனைவரின் வீட்டில் உள்ளது. திராவிட மாடலுக்கு அடித்தளம் போட்டவர்தான் கலைஞர். வருமுன் காப்போம் திட்டம், சுகாதார துறையில் கலைஞர் செய்த புரட்சி.

நாம் ஆட்சிக்கு வந்தது கொரோனா நேரம். தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லாமல் ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் ஐசியூ தேவைப்பட்டது. கலைஞர் காட்டிய வழியில் அறிவியலின் துணைகொண்டு தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாக முன்னடுத்து கொரோனாவிடம் இருந்து முதல்வர் காப்பாற்றினார். பத்தாண்டு சீர்கேட்டை மீட்டெடுக்க வேண்டிய சவால் முதல்வரிடம் இருந்தது. அதை வெற்றிகரமாக எதிர்கொண்டு இன்று நாட்டில் நம்பர் ஒன் முதலமைச்சராக திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார். திமுக திட்டங்களை மற்ற மாநிலங்கள் காப்பியடித்து கொண்டு இருக்கிறது.

பாஜ ஆட்சிக்கு வந்தால் எல்லோருடைய கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என பிரதமர் கூறினார். ஆனால் இன்று நாங்கள் அப்படி சொல்லவில்லை, பொய் சொல்கிறீர்கள் என்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறுகிறார். மன்னிப்பு கேட்க முடியாது. பாஜ ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என மோடி கூறிய ஆதாரத்தை கொடுக்க நான் தயார். பொய் பேசுவதால் உண்மை பாஜ கண்களுக்கு எப்போதும் தெரிவதில்லை.

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு செய்துள்ள கேடுகளுக்கும், அநீதிகளுக்கும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு எம்பி, மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி.லோகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டுக்கு செய்துள்ள அநீதிக்கு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Bajagu ,Tamil Nadu ,Ambathur ,Rajasthan ,2024 Parliamentary elections ,India ,Pajagu ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...