×

வருங்கால தலைமுறையினர் தங்கும் விடுதிகளுக்கு அடிப்படை வசதிகள் ஒருவாரத்தில் செய்து முடிக்க வேண்டும்

*சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் உத்தரவு

நாகப்பட்டினம் : வருங்கால தலைமுறையினர் தங்கும் விடுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஒருவார காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்ரபாணி, பழனியாண்டி, மோகன், ராமலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு வேளாங்கண்ணி வந்தனர். இந்த குழுவினர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய பின்னர் நேற்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வுகள் நடத்தினர். முதலில் வேளாங்கண்ணி அருகே செருதூர் கிராமத்தில் வெள்ளையாற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1500 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்தை ஆய்வு செய்தனர்.

இதை தொடர்ந்து செருதூர் பஞ்சாயத்தார்கள் குழு தலைவரிடம் விசைப்படகுகள் சென்று வரும் வகையில் இந்த பகுதியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். வேளாங்கண்ணி பேராலயம் அருகில் இருப்பதால் இந்த இடத்தை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என கூறினர். இதை தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் பகுதியில் மீன்வளத்துறை சார்பில் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் நாகப்பட்டினம் கோட்டைவாசல் அருகே அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியை பார்வையிட்டனர். அப்போது அங்கு இருந்த மாணவர்கள் ஐயா வணக்கம் விடுதியில் மின்விசிறி ஓடும். ஆனால் காற்று வராது. கழிவறை உள்ளது. ஆனால் கதவுகள் இல்லை. கழிவறை சுத்தம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதால் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் ஒரே உப்பு. விடுதியில் சுற்றுசுவர் மற்றும் கண்காணிப்பு கேமிரா இல்லாத காரணத்தால் பகல் நேரங்களில் கூட வெளிநபர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என புகார்கள் தெரிவித்தனர். புகார்களை கேட்ட என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் கழிவறையை சென்று பார்த்து முகம் சுளித்து வெளியில் வந்தார்.

மாணவர்களின் படுக்கை அறைக்கு சென்று அங்குள்ள பாய் மற்றும் தலையணைகளை பார்த்து எதிர்கால தலைமுறையினர் தலையணை, படுக்கும் பாய் இப்படி இருந்தால் எப்படி படிப்பார்கள் என கூறினார். விடுதி முழுவதும் ஆய்வு செய்த பின்னர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜமூனாராணி மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோரை அழைத்து எதிர்கால தலைமுறையினர் தங்கும் விடுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஒரு வார காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து முடித்த பின்னர் அதன் புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதன்பின்னர் விடுதிக்கு தேவையான சுற்றுச்சுவர் மற்றும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

இதை தொடர்ந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை ஆகியவற்றை கேட்டறிந்தனர். பின்னர் வெளிப்பாளையம் அகத்தீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்படும் திருமண மண்டபத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது ஒப்பந்தகாரரிடம் பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்துவதால் கட்டுமான பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்று கூறி விட்டு வெளியில் வந்தனர். அப்போது அருகில் இருந்த அங்கன்வாடி மையத்திற்குள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் திடீரென உள்ளே சென்று குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் மதிய உணவை அங்கன்வாடி சமையலரிடம் கேட்டு வாங்கி சாப்பிட்டு பார்த்தார். பின்னர் சமையல் அறையில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களையும் ஆய்வு செய்தார்.

குழந்தைகளுக்கு தரமான உணவுகளை தினந்தோறும் வழங்க வேண்டும் என சமையலரிடம் தலைவர் வேல்முருகன் கூறினார். பின்னர் நாகப்பட்டினம் நம்பியார் நகரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பில் கட்டப்படும் புயல்பாதுகாப்பு மைய கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, சார் ஆட்சியர் பானோத்ம்ருகேந்தர்லால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post வருங்கால தலைமுறையினர் தங்கும் விடுதிகளுக்கு அடிப்படை வசதிகள் ஒருவாரத்தில் செய்து முடிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Legislative Assembly Government Pledge Committee ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில்...