×

போளூர், சாத்தனூர் வனப்பகுதியில் சிக்கினர் வன விலங்குகள், பறவைகளை வேட்டையாடிய 4 பேர் கைது

*நாட்டுத்துப்பாக்கிகள், வெடிமருந்து பறிமுதல்

போளூர் : போளூர் அடுத்த தேவிகாபுரம் சாலை மற்றும் சாத்தனூர் வனப்பகுதியில் வன விலங்குகள், பறவைகளை வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 3 நாட்டுத்துப்பாக்கிகள், வெடிமருந்து ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த தேவிகாபுரம் சாலையில் டிஎஸ்பி சோ.கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் க.குபேந்திரன், த.ஐயப்பன் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மட்டப்பிறையூர் கூட்ரோடில் மோட்டார் பைக்கில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தபோது அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் கையில் 2 நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பது தெரியவந்தது.

மேலும் விசாரணை செய்ததில் கலசபாக்கம் அடுத்த வில்வாரனி குருவிக்காரர் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜேஷ்(22), மருத்துவம்பாடி கிராமத்தை சேர்ந்த சிகாமனி மகன் அரவிந்த்(22) ஆகியோர் என தெரியவந்தது. மேலும் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்து பறவைகளை வேட்டையாடுவது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கிகளையும், மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை வனச்சரக அலுவலர் னிவாசன் தலைமையில் வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் ரவி, கோவிந்தராஜ், சிலம்பரசன், ராஜ்குமார், கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தனூர் வனச்சரகம் பென்னையார் காப்புக்காடு பிக்கப் டேம் பகுதி காப்புக்காட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி எடுத்துக்கொண்டு பைக்கில் 2 பேர் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.

அப்போது மறைந்திருந்த வனத்துறையினர மடக்கி பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டுமே பிடிபட்டார். மற்றொருவர் நாட்டு துப்பாக்கியுடன் காப்புக்காட்டில் இருட்டில் தப்பி ஓடி தலைமறைவாகினார். பிடிபட்டவரை அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர் தானிப்பாடி கிராமத்தை சேர்ந்த பாண்டியன்(37) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில், தப்பி சென்ற கொளமஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(42) என்பவரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் ராஜேஷ் கூலி ஆட்களை வைத்து பலமுறை வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் இருவரையும் கைது செய்து தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போளூர், சாத்தனூர் வனப்பகுதியில் சிக்கினர் வன விலங்குகள், பறவைகளை வேட்டையாடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Satanur Forest, ,Polur ,Devikapuram Road ,Satanur Forest ,Polore ,Bolur ,Satanur ,
× RELATED பள்ளி, கல்லூரி வாகனங்களில் கேமராக்கள்,...