×

திருப்பதியில் நல திவாஸ் நிகழ்ச்சி காவலர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா செய்வதால் சிறப்பாக செயல்பட முடியும்

*எஸ்பி அறிவுறுத்தல்

திருப்பதி : காவலர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா செய்வதால் சிறப்பாக செயல்பட முடியும் என திருப்பதியில் நடைபெற்ற நல திவாஸ் நிகழ்ச்சியில், எஸ்பி பரமேஸ்வர் பேசினார்.
திருப்பதி காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் மாநில டிஜிபி ராஜேந்திரநாத்தின் அறிவுறுத்தலின்படி நேற்று காவலர்கள் நல திவாஸ்(குறைதீர்வு) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பதி எஸ்பி பரமேஸ்வர் கலந்து கொண்டு காவலர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது எஸ்பி பரமேஸ்வர் காவல் துறையினரிடம் கூறியதாவது:

துறை சார்ந்த பிரச்னைகள் இருந்தால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் நடைபெறும் நலத் திவாஸ் நிகழ்ச்சியில் உங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் ஆய்வு செய்து தீர்வு காண்பார்கள். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் எப்போதும் உடல் மற்றும் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.

அப்போது தான் மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையை பெற முடியும். காவலர் ஒருவர் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும், ஓய்வு நேரத்தில் தினமும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் வலுவாகவும், சிறப்பாக செயல்பட முடியும். பணியாளர்கள் சுகாதார விஷயத்தில் தகுந்த கவனம் செலுத்துவதுடன், ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், மாவட்ட காவல் மருத்துவமனையின் சேவையைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

காவலர்களுக்கு ஓய்வு கிடைப்பது அரிது. தனக்குக் கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல் குடும்ப உறுப்பினர்களுடன் முடிந்தவரை நேரத்தைச் செலவழித்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கை, காவல் துறையின் கடமைகளில் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்க கூடாது. நமது குழந்தைகளுக்கு சரியான பாதையைக் காட்டி அவர்களின் லட்சியங்களை அடைய ஊக்குவித்து வழிகாட்ட வேண்டும். களத்தில் எப்போதும் கடினமாக உழைக்கும் காவலர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

ஏதேனும் பிரச்னை இருந்தால், உங்கள் உயரதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் அல்லது என் கவனத்திற்கு கொண்டு வந்தால் பிரச்னை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். திருப்பதிக்கு மாநிலம் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். முதலில் அவர்கள் பார்ப்பது பணியில் இருக்கும் காவல்துறையைத்தான். இங்கு ஒழுக்கம் மிக முக்கியம். எந்த சிறு தவறும் பெரிய விஷயமாகிவிடும்.

காவல் துறைக்கு சேவை செய்ய மட்டுமே வந்துள்ளோம். ‘மக்களுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் சேவை செய்வது போன்றது’ என்பதை மனதில் வைத்து, அனைவரும் கடமையைச் சிறப்பாகச் செய்து திருப்பதி மாவட்டத்திற்கு நற்பெயரை ஏற்படுத்த வேண்டும்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை கூடுதல் எஸ்பி லட்சுமிநாராயண, ஏஆர் டிஎஸ்பிக்கள் ரவீந்திர், நந்தகிஷோர், ஆர்ஐக்கள் சீனிவாசலு, சந்திரசேகர், நாகபூஷணம், சலபதி, ஆர்எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

The post திருப்பதியில் நல திவாஸ் நிகழ்ச்சி காவலர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா செய்வதால் சிறப்பாக செயல்பட முடியும் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ராமர் கோயிலை மூடுவதை தடுக்கவே 400 எம்.பி.க்கள் வேணும்: மோடி பிரசாரம்