×

பவானிசாகர் அணையில் மீன் பிடிப்பது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை

 

சத்தியமங்கலம், ஜூலை 15: பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை பவானிசாகர் மற்றும் சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள பங்கு மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த சில நாட்களாக அணையில் மீன் பிடிக்காமல் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  மீன் பிடிக்கும் உரிமை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சங்கர்கணேஷ் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குனர் தில்லைராஜன், ஈரோடு மீனவர் கூட்டுறவு சங்க அதிகாரி கொழிஞ்சிநாதன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக மேலாளர் சுகுமார், மீன்பிடி ஒப்பந்ததாரர் சக்தி அண்ட் கோ மற்றும் பவானிசாகர் சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தற்காலிகமாக அணையில் மீன் பிடிக்க விருப்பம் உள்ள மீனவர்கள் மீன்பிடித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்திற்கு கொடுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர்களை மற்ற மீனவர்கள் தடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனால், கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் மீன்பிடி தொழில் நடைபெறாத நிலையில் இன்று முதல் மீண்டும் மீன்பிடிக்கும் பணி தொடங்க உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பவானிசாகர் அணையில் மீன் பிடிப்பது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar dam ,Sathyamangalam ,Bhavanisagar ,Sirumugai Fisherman Cooperative ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த...