×

பிரீமியம் தொகை செலுத்தியதாக போலி ரசீது வழங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ.2.54 கோடி மோசடி: முன்னாள் எல்ஐசி ஏஜென்ட் கைது

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தி.நகரை சேர்ந்த மனோகரன் என்பவர் கடந்த மாதம் புகார் ஒன்று அளித்தார். அதில், வேளச்சேரியை சேர்ந்த எல்ஐசி ஏஜென்ட் ரவீந்திரன் (50) என்பவரிடம், கடந்த 2013ம் ஆண்டு முதல் எல்ஐசி பாலிசி எடுத்து, ஒவ்வொரு மாதமும் பிரீமியம் தொகையை எல்ஐசியில் கட்டி வந்தேன். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரடியாக எல்ஐசிக்கு செல்ல முடியாததால், ஏஜென்ட் ரவீந்திரன் தனது வங்கி கணக்கிற்கு பிரீமியம் தொகையை அனுப்பினால், நான் அந்த பணத்தை எல்ஐசியில் கட்டிவிடுவதாக கூறினார். அதன்படி நான் மாதம்தோறும் அவரது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பினேன். பணம் கட்டியதற்கான எல்ஐசி பாலிசியின் ரசீதுகளை அவர் எனக்கு அனுப்பினார். பிறகு எல்ஐசி பாலிசி முதிர்வின் போது, எல்ஐசி அலுவலகத்திற்கு சென்று நான்கேட்ட போது, நீங்கள் பிரீமியம் தொகையை முறையாக செலுத்தவில்லை என்றும், முதிர்வு தொகையை நீங்கள் எடுத்துவிட்டீர்கள் என்றும் கூறினர். இதனால் நான் அதிர்ச்சியடைந்து, எல்ஐசியில் ஒவ்வொரு மாதமும் கட்டிய பணத்திற்கான ரசீதுகளை காட்டிய போது, இது போலியான ரசீதுகள் என்று எல்ஐசி அதிகாரிகள் கூறினர்.
எனவே, போலி ரசீதுகள் கொடுத்தும், எனது கையெழுத்தை போலியாக போட்டு பாலிசியில் உள்ள 2 கோடியே 54 லட்சத்து 83 ஆயிரத்து 978 ரூபாயை எடுத்து மோசடி செய்த எல்ஐசி ஏஜென்ட் ரவீந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் அளித்தார்.

இந்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாரதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், எல்ஐசி ஏஜென்ட் ரவீந்திரன், கொரோனா காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, இவர் மூலம் பாலிசி எடுத்த நபர்களிடம், பிரீமியம் தொகையை செலுத்துவதாக பெற்று, அதை எல்ஐசியில் கட்டியதாக போலியாக ரசீதுகளை தயாரித்து கொடுத்து ஏமாற்றியதும், பாலிசி முதிர்வுகள் வந்த உடன் சம்பந்தப்பட்ட பாலிசிதாரர்களின் முகவரியை மாற்றி போலியாக கையெழுத்து போட்டு ரூ.2.54 ேகாடி வரை மோசடி செய்தது உறுதியானது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வேளச்சேரி ஏஜிஎஸ்.காலனியை சேர்ந்த முன்னாள் எல்ஐசி ஏஜென்டான ரவீந்திரனை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து எல்ஐசி நிறுவனத்தின் முத்திரைகள், போலி ரசீதுகள், 3 லேப்டாப், ஒரு ஐ-பேட், செல்போன் பறிமுதல் செய்தனர்.

The post பிரீமியம் தொகை செலுத்தியதாக போலி ரசீது வழங்கி வாடிக்கையாளர்களிடம் ரூ.2.54 கோடி மோசடி: முன்னாள் எல்ஐசி ஏஜென்ட் கைது appeared first on Dinakaran.

Tags : -LIC ,Chennai ,Manokaran ,D. Nagar ,Chennai Police Commissioner ,LIC ,Dinakaran ,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...