×

7 தளங்கள், அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் மதுரையில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

மதுரை: ஏழு தளங்கள், அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் பிரமாண்டமாக மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் 7 தளங்களுடன், ரூ.215 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டு கம்பீரமாக எழுந்து நிற்கிறது. இந்நூலகம் மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தம்மை தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் என அனைவருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.

நூலக திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இன்று நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு விட்டு, காலை 10 மணிக்கு விமானம் மூலம் புறப்படுகிறார். காலை 11.25 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கு, அமைச்சர்கள், டிஜிபி, ஐஏஎஸ் அதிகாரிகள், எம்எல்ஏக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு பகல் 12.30 மணிக்கு முதல்வர் வருகிறார். வரும் வழியில் மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்டம் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட திமுகவினர் வரவேற்பு கொடுக்கின்றனர்.

விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்த பின், அங்கிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 4 மணிக்கு புறப்பட்டு கலைஞர் நூற்றாண்டு நூலகம் வருகிறார். 4.30 மணிக்கு நூலகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். சுமார் ஒரு மணிநேரம் நூலகத்தின் பல்வேறு தளங்களுக்கு சென்று பார்வையிடுகிறார். அதனைத்தொடர்ந்து 5.30 மணிக்கு மதுரை ஆயுதப்படை மைதானத்திற்கு வருகிறார். அங்கு, நடக்கும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இரவு 7 மணிக்கு, மதுரை கோச்சடையில் உள்ள கருமுத்து கண்ணன் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு மதுரை விமான நிலையம் செல்கிறார். இரவு 8.55 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் செல்கிறார்.

The post 7 தளங்கள், அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் மதுரையில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Library ,Madurai ,Chief Minister ,M. K. Stalin ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED கலைஞர் நூலகத்தில் ‘மரம் அறிவோம்’ நிகழ்ச்சி