![]()
ஸ்ரீஹரிகோட்டா: நிலவிற்கான பயணத்தை சந்திராயன் 3 தொடங்கியுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது. இன்று ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் ஒரு மாதத்துக்கும் மேலான பயணத்துக்கு பின் நிலவைச் சுற்றி வரும். பூமியில் இருந்து 179 கி.மீ தொலையில் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
நிலவைச் சுற்றி வந்த பின் ஆக.23-ம் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு தளத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சந்திரயான்-3 விண்கலம் 16 நிமிடத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. சந்திராயன் 3 அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலவை நோக்கிய பயணத்தை திட்டமிட்டபடி தொடங்கியுள்ளது. புவி வட்டப்பாதையில் செலுத்தப்பட்ட சந்திராயன் 3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது. நிலவின் தென் துருவத்தில் இறங்கி சந்திரயான்-3 விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது.
சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு வாழ்த்துகள் என தெரிவித்தார். LVM3 M4 ராக்கெட் புவியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. அனைத்து கட்டங்களையும் கடந்து சந்திரயான் 3 நிலவில் தரையிறங்க வாழ்த்துகளை தெரிவிப்போம் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
The post சந்திராயன் 3 அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து appeared first on Dinakaran.

