×

ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் நாமினியிடம் ஒப்படைப்பு: தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில்

பெங்களூரு: ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விகளுக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் அளித்துள்ளனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், வழக்கு நடந்த மாநிலமான கர்நாடகாவில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

வழக்கு முடிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், விலை உயர்ந்த புடவைகள், சால்வைகள், செருப்புகள் உட்பட 28 வகையான பொருட்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை, கர்நாடக அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என, பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட, கிரண் ஜவளி என்ற அரசு வக்கீலை கர்நாடக அரசு நியமித்தது.

தொடர்ந்து வழக்கு விசாரணையின்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்த பொருட்களில் தங்கம், வைரம், ரூபி, மரகதம் என 30 கிலோ ஆபரணங்கள் மட்டுமே கருவூலத்தில் இருப்பதாக இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள கிரண் ஜவளி நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது மீதமுள்ள 11 ஆயிரம் புடவைகள் உட்பட 28 பொருட்கள் எங்கே? என கேள்வி எழுப்பப்பட்டது. தொடர்ந்து, பறிமுதல் செய்த பட்டியலில் உள்ள மற்ற 28 வகை பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி, சென்னை ஆலந்துாரில் உள்ள தமிழக லஞ்ச ஒழிப்பு இயக்குனரக எஸ்.பிக்கு, சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் கடிதத்துக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்களிடம் எதுவும் இல்லை. நீதிமன்ற ஆவணத்தில் பட்டியலிடப்பட்ட பொருட்கள் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்து குவிப்பு வழக்கில் 11 ஆயிரம் புடவைகள் உட்பட 28 பொருட்கள் ஜெயலலிதாவின் நாமினியான பாஸ்கரனிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பது இந்த வழக்கில் அடுத்தகட்ட திருப்பத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

The post ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் நாமினியிடம் ஒப்படைப்பு: தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் appeared first on Dinakaran.

Tags : Namini ,Tamil Nadu Larithal Police ,Bengaluru ,Jayalalithah ,RTI ,Tamil Nadu Laritham Police ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்