×

அமராவதி பிரதான கால்வாயில் திடீர் உடைப்பு: அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

 

திருப்பூர், ஜூலை14: அமராவதி அணையின் பிரதான கால்வாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டதால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் 5 நாட்களுக்கு உயிர் தண்ணீர் திறக்க அரசு கடந்த 9ம் தேதி உத்தரவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25.250 ஏக்கர் புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதான கால்வாய் வழியாக 190.08 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் ஜூலை 10 முதல் 15-ம் தேதி வரை 5 நாட்களுக்கு வினாடிக்க 440 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. பயிர்களை காப்பாற்றவும், சிறப்பு நனைப்புக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன்படி கடந்த 3 நாட்களாக அணையில் இருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. நேற்று மாலை 6.45 மணி அளவில் பிரதான கால்வாயில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள சாமுராயப்பட்டி பகுதியில் கால்வாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கால்வாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகே தென்னை,கரும்பு தோட்டங்களை வெள்ளம் போல் சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறியது.

இதுகுறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறையினர் அமராவதி அணையில் இருந்து வாய்க்காலுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை நிறுத்தினர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணி மற்றும் விவசாயிகள் திரண்டு வந்து சம்பவ இடத்தினை பார்வையிட்டனர். நேற்று அணையில் இருந்து வாய்க்காலுக்கு வினாடிக்கு 440 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. உடைப்பு குறித்து தகவலறிந்ததும் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. இன்று தண்ணீர் வடிந்த பின்னர் வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பினை சீரமைக்கும் பணி துவங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அமராவதி பிரதான கால்வாயில் திடீர் உடைப்பு: அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Amaravati ,Tirupur ,Amaravati Dam ,Dinakaran ,
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்