×

2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்: திரும்பும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறார்

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் பாஸ்டில் தின அணிவகுப்பில் பங்கேற்க அந்நாட்டு அதிபர் மேக்ரான் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக பாரீசுக்கு இன்று புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து நாடு திரும்பும் வழியில் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி, தலைநகர் பாரீசில் பாஸ்டில் தின அணிவகுப்பு நாளை நடக்க உள்ளது. இதில் கவுரவ விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்தார். இந்தியா, பிரான்ஸ் நட்புறவின் 25ம் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்று 2 நாள் பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று பாரீசுக்கு புறப்படுகிறார். பாஸ்டில் தின அணிவகுப்பில் இந்தியாவின் 269 பேர் கொண்ட முப்படை குழுவும் பங்கேற்று அணிவகுப்பு நடத்த உள்ளது. மேலும், பிரான்ஸ் விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சியில் பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கிய ரபேல் விமானங்களும் பங்கேற்க உள்ளன. இதில் 3 ரபேல் விமானங்கள் பங்கேற்கும் என கூறப்படுகிறது. பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் அதிபர் மேக்ரான் அரசு விருந்தும், தனிப்பட்ட இரவு விருந்தும் வழங்க உள்ளார். இரு தலைவர்கள் இடையே இருதரப்பு உறவு, வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையும் நடக்க உள்ளது.

இதில் பிரான்சிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான பேச்சு இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, பிரதமர் மோடி பிரான்ஸ் செனட் மற்றும் நாடாளுமன்ற குழு தலைவர்களையும், இந்தியா, பிரான்ஸ் தொழில் நிறுவன சிஇஓக்களையும் சந்தித்து பேச உள்ளார். அங்குள்ள இந்திய வம்சாவளிகளையும் சந்தித்து பேச உள்ளார். பிரான்சில் 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் பிரதமர் மோடி வரும் 15ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அபுதாபி செல்லும் பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் எரிசக்தி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, பின்டெக் மற்றும் பாதுகாப்பு, கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் பயணம்: திரும்பும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Modi ,France ,UAE ,New Delhi ,President Macron ,Bastille Day parade ,
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...