‘‘புதுச்சேரியில் மக்களுடன் நெருங்கி பழகியது, அரசியல்வாதிகளுடன் நெருக்கம் காட்டிய பவர்புல் பெண்மணியின் ரகசிய திட்டம் தான் என்னவாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் புல்லட்சாமி கட்சி தயாராகிவிட்டதாம். ஏற்கனவே, புல்லட்சாமியிடம் இருந்து புதுவை ராஜசபா சீட்டை தட்டி பறித்த தாமரை தரப்பு, மக்களவை தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாம். இதற்கு, புல்லட்சாமியை எளிதில் சம்மதிக்க வைத்துவிடலாம் என உறுதியாக நம்பிக்கை வந்துள்ளதாம். அவரும் புதுவையில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிக்கும் ெதாகுதிக்கு ஒரு கோடி வீதம் குறைந்தது ரூ.30 கோடி தேவைப்படும்.
பணம் மற்றும் அறிமுகமான நபர் கட்சியில் இல்லாததால் புல்லட்சாமி தாமரை திட்டத்துக்கு ஓகே சொல்லும் மனநிலையில் உள்ளாராம். காரணம், சென்ட்ரலில் இருந்து பெரிய அளவிலான கரன்சி அவரது கட்சிக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்காம். தாமரை தோற்றாலும் அந்த கரன்சிக்கு பங்கம் வராதாம். கடந்த இரண்டரை ஆண்டுகளில் கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்களுக்கு, அவர்களது தொகுதியில் எந்த பெரிய திட்டமும் அரசு செய்யவில்லை. சட்டமன்ற தேர்தலில் நின்று செலவு செய்த பணமும் மக்கள் பிரதிநிதிகளால் எடுக்க முடியவில்லையாம். மீண்டும் மக்களவை தேர்தலில் செலவு செய்யுங்கள் என கூறமுடியாது என்பதால் புல்லட்சாமியும், தாமரை தேர்தலில் நிற்க ஓகே சொல்லிவிடுவார் என அவரது கட்சியினரே, அடித்து சொல்றாங்களாம்.
தாமரை சார்பில் போட்டியிட சிவாயமானவரை நிறுத்த தலைமை விரும்பியது. அவரும் மறுத்துவிட்டதால் பவுர்புல் பெண்மணி, ஜெயமான பைனான்சியர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனராம். கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் நின்று தோல்வியடைந்த பவுர்புல் பெண்மணி, இந்தமுறை புதுவை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளாராம். புதுச்சேரி மக்களின் மனதில் நிறைந்து உள்ளேன். புதுச்சேரி மாநிலத்தின் மூலை முடுக்கு எல்லாம் எனக்கு தெரியும். ஏற்கனவே மக்களிடம் அறிமுகம் இருப்பதால் நான் எளிதில் வெற்றி பெறுவேன் என தலைமைக்கு தகவல் அளித்து விட்டு வந்துள்ளாராம். தேர்தல் நெருங்க நெருங்க தான் வேட்பாளர் யார் நிற்க போகிறார் என்பது தெரியும்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ சேலம்காரர் ஏன் டென்ஷனில் இருக்கிறார் …’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ இலை கட்சியின் 2 அணியிலுமே மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளனர். தேனிக்காரர் அணியில் உள்ள அதிருப்தி ஆதரவாளர்களை தனது பக்கம் இழுக்க மலைக்கோட்டை மத்திய மண்டலத்தை சேலம்காரர் குறி வைத்துள்ளார். அதிருப்தி ஆதரவாளர்களுக்கு ‘விட்டமின் ப’ மற்றும் கட்சியில் பொறுப்பு கொடுக்க முடிவு செய்து அதற்கான திரைமறைவான வேலையில் சேலம்காரர் டீம் ஒரு பக்கம் இறங்கியுள்ளது. மற்றொரு பக்கம் நெற்களஞ்சியத்தில் தேனிக்காரரின் நம்பிக்கையான நெருங்கிய ஆதரவாளரான மாஜி அமைச்சர் வைத்தியானவரை தனது பக்கம் இழுத்தால் மலைக்கோட்டை மத்திய மண்டலத்தில் உள்ள தேனிக்காரர் ஆதரவாளர்களை கூண்டோடு அவரது பின்னால் வந்து விடுவார்கள் என சேலம்காரர் நினைத்துள்ளார்.
எப்படி வைத்தியானவரை இழுக்கலாம் என ஸ்கெட்ச் போடப்பட்டு அதற்கான திரைமறைவான வேலையும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் ஸ்கெட்ச் போட்டப்படி எதுவும் இதுவரை நடக்க வில்லையாம். இதனால் வேறுவழியின்றி வைத்தியானவருக்கு எதிராக பல்வேறு வியூகங்களை வகுத்து சேலத்துக்காரர் அதற்கான காய் நகர்த்தி வருகிறார். வைத்தியானவருக்கு நிகராக மற்றும் அவரது நெருங்கிய ஆதரவாளர்களை குறி வைத்து, அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் திரைமறைவான பணியை ேசலத்துக்காரர் டீம்காரர்கள் துவக்கியுள்ளனர். ஆனால், சேலம் ஆதரவாளர்களான மலைக்கோட்டை மத்திய மண்டலத்தில் உள்ள மாஜி அமைச்சர்கள் இந்த விஷயத்தில் பெரிய அளவு ரியாக்ஷன் எதுவும் காட்டவில்லை.
இந்த தகவல் ஆதாரத்துடன் சேலத்துக்காரரின் கவனத்துக்கு அவரது டீம் கொண்டு சென்றனர். இதனால் சேலம்காரர், மலை கோட்டை மாஜி அமைச்சர்கள் மீது உச்சகட்ட டென்சனில் இருந்து வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘அல்வா மாவட்டத்தில் உள்ள தாமரை கட்சி மக்கள் பிரதிநிதி பற்றி சொல்லேன் கேட்கிறேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் இருந்து வெளியேறி தேசிய கட்சியில் இணைந்தாலும், இலை கட்சி பாசத்தில்தான் இருக்கிறார் அல்வா ஊரின் எம்எல்ஏ. ஏற்கனவே கடந்த சட்டசபை தேர்தலில் இலை கட்சியில் தான் வெற்றி பெற்ற தொகுதியை தேசிய கட்சியிடம் கேட்டுப் பெற்றவர், வெற்றி பெற்று தற்போது தேசிய கட்சியின் சட்டமன்ற குழு தலைவராகவும் உள்ளார்.
அடுத்து வரும் மக்களவை தேர்தலிலும் இலை கட்சி ஆதரவுடன் களம் காண திட்டமிட்டுள்ளார். இப்படி தேசிய கட்சியில் இருந்தாலும் இலை கட்சியின் ஆதரவு இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும் என்பதையும் உணர்ந்துள்ளார், அல்வா நகரத்து எம்எல்ஏ. சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த இவர் தடாலடியாக தேனி அணியுடன் தான் கூட்டணி என்றும் தெரிவித்தார். அன்று தான் இலை கட்சியின் பொதுச் செயலாளராக சேலம்காரரை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனினும் அல்வா ஊரின் எம்எல்ஏவின் விருப்பம் நிறைவேறுமா என்பது தான் அல்வா மாவட்டத்தில் பேச்சாக உள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
The post எம்பி பதவிக்காக பவர்புல் பதவியை துறக்க நினைக்கும் பெண்மணியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.