×

3 நாட்களுக்கு பின் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது: 1,37,353 பேர் பனிலிங்க தரிசனம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக பெய்த பலத்த மழையினால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து தடைபட்டது. ஜம்மு -ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டதால் சனிக்கிழமை முதல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 3 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மாலை அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. முகாம்களில் தங்கி இருந்த பக்தர்கள் இரண்டு வழிகளிலும் யாத்திரையை தொடங்கினார்கள்.

பலத்த பாதுகாப்புடன் 7800 பேர் ஜம்மு முகாமில் இருந்து நேற்று காலை புறப்பட்டு சென்றனர். ஜூலை ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை 1,37,353 பேர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இதனிடையே உத்தரப்பிரதேசத்தில் இருந்து அமர்நாத் செல்லும் பக்தர்களை ஏற்றி வந்த கார், உதம்பூர் மாவட்டத்தில் சாலை தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பக்தர்கள் 5 பேர் காயமடைந்தனர்.

* 24 மணி நேரத்தில் 5 பக்தர்கள் உயிரிழப்பு
அமர்நாத் யாத்திரை மேற்கொண்டிருந்த 5 பக்தர்கள் ஒரே நாளில் மாரடைப்பினால் உயிரிழந்துவிட்டனர். பாகல்காம் வழியாக யாத்திரை சென்ற 3 பேரும், பால்தால் வழியாக சென்ற இரண்டு பேரும் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டனர். இதில் இரண்டு பேர் உத்தரப்பிரதேசத்தையும், இரண்டு பேர் மத்தியப்பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். ஒருவர் எந்த ஊரை சேர்ந்தவர் என இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த ஆண்டு யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 19 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

The post 3 நாட்களுக்கு பின் அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது: 1,37,353 பேர் பனிலிங்க தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Amarnath Yatra ,Banilinga ,Jammu ,Kashmir ,Jammu… ,Amarnath ,Yatra ,Dinakaran ,
× RELATED ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம்