×

சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்ட வழக்குகளில் கைதும், காவல் விசாரணையும் அவசியம்: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்

சென்னை: செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததால் இறுதி முடிவை எட்டுவதற்காக இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று இரண்டாவது நாளாக வழக்கு விசாரணைக்கு வந்தது. மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் பரணி குமார் ஆகியோரும், அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகினர்.

அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் இயற்றும் முன் சட்டவிரோத பண பரிமாற்றங்களால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஐ.நா.வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தானே தவிர, அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது. புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது.

கைதுக்கு பிறகும், புகார் தாக்கலுக்கு பிறகும், புலன் விசாரணை செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் மேல் விசாரணை செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் என்பதால் கைது செய்யப்பட்ட பிறகு ஜாமீன் வழங்க முடியாது. அமலாக்கத் துறைக்கு காவல் துறை அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால், சுங்க வரிச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் ஓராண்டு முதல் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை. கைது நடவடிக்கை சரியானது தானா என்பதை அறிந்து கொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவு என்பது, ஜாமீன் வழங்க மறுத்ததுதான். அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க கோரி மனுத்தாக்கல் செய்ய எந்த தடையும் உயர் நீதிமன்றம் விதிக்கவில்லை. காவல் விசாணை கோரியது நீதிமன்ற உத்தரவை மீறியதல்ல என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அப்போது ஏதேனும் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்க முடியும். அதனால் நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினோம். செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை. எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியதில் இருந்து நீதிமன்ற காவலில் இருப்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜி கைதின் போது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியிருக்கிறார்.கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க முடியாவிட்டால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மூத்த நீதிபதி நிஷா பானு தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் எவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தால் போதுமானது என்றாகிவிடும். பொதுவாக அனைவரின் இதயத்திலும் 40 சதவீத அடைப்பு இருக்கும் என்று வாதிட்டு தனது வாதத்தை முடித்தார். இதையடுத்து, மேகலா தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கின் விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்ட வழக்குகளில் கைதும், காவல் விசாரணையும் அவசியம்: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம் appeared first on Dinakaran.

Tags : ICourt Chennai ,Megala ,Senthil Balaji ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...