×

பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து சட்டம்-ஒழுங்கும் பாதிக்கும்: இந்திய சட்ட ஆணையத்துக்கு துரைமுருகன் கடிதம்

சென்னை: பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச் சார்பின்மைக்கு குந்தகம் விளைவிப்பதுடன் சட்டம் ஒழுங்கு பாதிக்கும். எனவே, இந்த சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என இந்திய சட்ட ஆணையத்துக்கு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பாக பொது மக்கள், மத அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவர்களிடம் 22வது சட்ட ஆணையம் கடந்த மாதம் 14ம்தேதி கருத்து கேட்டுள்ளது. டெல்லியில் 3ம்தேதி நடைபெற்ற சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பங்கேற்றார்.
அவர், ‘பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது. மாநில உரிமை மற்றும் பழங்குடியினர் உரிமைகளை பாதிக்கும்’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்புக்கு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பிரிவு 25-ன்படி குடிமக்கள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மத வழக்கங்களைப் பின்பற்றவும், பரப்பவும் உரிமை பெற்றவர்கள். பாஜ கட்சியின் ‘ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு’ என்ற கொள்கையின் விளைவாக ‘பொது சிவில் சட்டத்தை’ அறிமுகப்படுத்தும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச் சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படுத்துவதுடன், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகளை இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும். பொது சிவில் சட்டத்தை திமுக வலிமையாக எதிர்க்கிறது. காரணம், இந்தச் சட்டம் தனிநபர் உரிமையான எந்த மதத்தையும் பின்பற்றுதல், வாரிசுரிமை, தத்தெடுத்தல் போன்றவற்றில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 25 வழங்கியுள்ள உரிமைகளை பறிப்பதற்கும், பிரிவு-29 வழங்கியுள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளைப் பறிப்பதற்குமான முயற்சியாகும்.

பெரும்பான்மை இந்து மதத்தைச் சார்ந்த பட்டியலின மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், திருமணம் தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களையும் இந்தச் சட்டம் அழித்துவிடும். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற உத்தரவை பிறப்பித்து, அதன் மூலம் உரிய பயிற்சி பெற்ற யாராக இருந்தாலும், சாதிகளைக் கடந்து அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை ஏற்படுத்தி மானுடத்தை உயர்த்தியது. எங்களுடைய இன்னொரு ஆலோசனை என்னவெனில், மதங்களுக்கிடையேயான பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன், ஒன்றிய அரசு இந்துமத சாதிகளுக்கிடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி சாதீய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய வேண்டும் என்பது.

பொது சிவில் சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, அரசமைப்பு சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 29 ஆகியவற்றை மீறிய சட்டமாக திமுக பார்க்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 87 சதவீதம், இஸ்லாமியர்கள் 6 சதவீதம், கிருத்தவர்கள் 7 சதவீதம். இந்த மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொது சிவில் சட்டம் இத்தகைய ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வாய்ப்பு உள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்பது உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு, நமது இந்திய நாடு என்பதை ஒன்றிய அரசு மறந்துவிடக் கூடாது. எனவே, 22வது சட்ட ஆணையம் 21வது சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று திமுக கூறுகிறது. இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.

The post பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து சட்டம்-ஒழுங்கும் பாதிக்கும்: இந்திய சட்ட ஆணையத்துக்கு துரைமுருகன் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Durai Murugan ,Law Commission of India ,CHENNAI ,Duraimurugan ,
× RELATED NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தை சென்னையில் நடத்த திட்டம்