×

பிட்லைனில் நிறுத்தப்படும் பிலாஸ்பூர் பெட்டிகளை கொண்டு நெல்லை – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுமா?: தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் 3 நாட்கள் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிலாஸ்பூர் ரயில் பெட்டிகளை பயன்படுத்தி நெல்லை – பெங்களூர் இடையே சிறப்பு ரயில் இயக்கிட வேண்டும் என தென்மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லையிலிருந்து மத்திய பிரதேச மாநிலம் பிலாஸ்பூருக்கு (வண்டி எண்: 22620) வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.25 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோயம்புத்தூர், சேலம், ஜோலார்பேட்டை, ரேணுகுண்டா வழியாக, தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளை இணைத்து திங்கட்கிழமை இரவு பிலாஸ்பூரைச் சென்றடைகிறது..

மறு மார்க்கமாக இந்த ரயிலானது (வண்டி எண்: 22619) ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் பிலாஸ்பூரில் இருந்து காலையில் புறப்பட்டு அதே வழித்தடத்தில் வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் நெல்லையை வந்தடைகிறது. இந்த ரயிலில் ஒரு 2 அடுக்கு ஏசி பெட்டியும், 5 மூன்றடுக்கு ஏசி பெட்டிகளும், 9 ஸ்லீப்பர் பெட்டிகளும், 4 முன்பதிவு இல்லாத பெட்டிகளும், 2 லக்கேஜ் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஸ்லீப்பர் கோச்சை பொருத்தளவில் மொத்தம் 720 இருக்கைகள் உள்ளன. அதேபோன்று 4 முன்பதிவு இல்லாத பெட்டியில் சுமார் 500 பேர் வரை பயணிக்கலாம். 3 அடுக்கு ஏசி ெபட்டியில் மொத்தம் 360 பேர் வரை பயணிக்கலாம். 2 அடுக்கு ஏசி பெட்டியில் 52 பேர் பயணம் செய்யலாம். மொத்தம் இந்த ரயிலில் சுமார் 1500 பேர் பயணிக்கலாம்.பிலாஸ்பூர் ரயில் பெட்டிகளானது வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நெல்லை பணிமனையில் காலியாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த காலி ரயில் பெட்டிகளை கொண்டுதான் கடந்த மாதம் வரை நெல்லை – மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நெல்லை – மேட்டுப்பாளையம் ரயில் சேவையானது, தற்போது வியாழக்கிழமை புறப்படுவதற்கு பதிலாக, ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு செல்லும் வகையில், இம்மாதம் முதல் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வாரத்தில் இருந்து இந்த ரயிலானது 3 நாட்கள் காலியாக நிறுத்த வைக்கப்பட்டிருக்கும். எனவே, இவ்வாறு காலியாக நிறுத்திவைக்கப்படும் இந்த ரயில் பெட்டிகளை கொண்டு நெல்லையில் இருந்து வியாழக்கிழமை தோறும் தென்காசி, மதுரை, கரூர், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக பெங்களூருக்கு புதிய வாராந்திர சிறப்பு ரயில் சேவை துவக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தென் மாவட்ட ரயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து நெல்லை, தென்காசி ரயில் பயணிகள் சங்கத்தைச் சேர்ந்த கடையம் அந்தோனி கூறுகையில் ‘‘பிலாஸ்பூர் ரயில் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு 3 தினங்கள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் காலியாக நிற்கிறது. இப்போது அந்த ரயிலை வைத்து மேட்டுப்பாளையம் சேவையும் கிடையாது.

எனவே அதன் பெட்டிகளை கொண்டு ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குள் பெங்களூரு செல்லுமாறும், மறு மார்க்கமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு சனிக்கிழமை காலை 9 மணிக்கு வந்தடையும் வகையிலும் ரயில் சேவையை இயக்கலாம். தென் மாவட்டங்களைப் பொருத்தவரை நேரடியாக பெங்களூர் செல்ல வேண்டுமென்றால் 2 வழிகள் மட்டுமே உள்ளன. நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில் – பெங்களூர் (17236) தினசரி விரைவு ரயில் பயன்படுத்தலாம். அல்லது தூத்துக்குடியில் இருந்து மைசூருக்கு இயக்கப்படும், (16235) எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பயன்படுத்தலாம்.

ஆனால் இந்த 2 ரயில்களிலும் வார இறுதி நாட்களில் காத்திருப்பு பட்டியல் நூற்றுக்கும் அதிகமாக காணப்படுவதால், இந்த 2 ரயில்களிலும் நெல்லைவாசிகளுக்கு டிக்கெட் கிடைப்பது கடினமாக உள்ளது. மேலும் பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தென்மாவட்ட ஊழியர்கள், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் இந்த ரயிலை பயன்படுத்தி எளிதாக தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக இருக்கும். இதுதவிர நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள், பெங்களூர் சுற்றுவட்டார பகுதியில் வணிக நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கும் இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

The post பிட்லைனில் நிறுத்தப்படும் பிலாஸ்பூர் பெட்டிகளை கொண்டு நெல்லை – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுமா?: தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Paddy ,Bangalore ,Pilaspur Boxes ,Bitline ,South District Passenger ,Billaspur Railway Station ,Pilaspur Railway ,Pilaspur ,South District Passenger Expectation ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...