×

கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரில் 400 ஆண்டுகள் பழமையான ஏழு கற்சிற்பம் கண்டெடுப்பு

திருமங்கலம் : கள்ளிக்குடி அருகேயுள்ள தென்னமநல்லூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஏழு கற்சிற்பத்தினை தொல்லியல் கள ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வு ஒருங்கிணைப்பாளரும் பேராசியருமான முனிஸ்வரன் தலைமையில் ஆய்வாளர் அனந்தகுமரன், சிவன் ஆகியோர் அடங்கிய தொல்லியல் கள ஆய்வாளர்கள் கள்ளிக்குடி அடுத்த தென்னமநல்லூரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கி.பி 17ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து கள ஆய்வாளர் முனிஸ்வரன் கூறியதாவது, ‘‘இந்த பகுதியை மதுரையில் நாயக்கர் ஆட்சி காலத்தில் தென்னவன் என்ற குறுநில மன்னர் நிர்வாகம் செய்துள்ளார். இவரது பணியை பாராட்டி நாயக்கர் மன்னர் அவரின் பெயரில் தென்னவன் நாடு என அழைக்கப்பட்டுள்ளது. அது நாளடைவில் மருவி தென்னமநல்லூர் என மாறியுள்ளது. இறந்து போன கணவனுடன் அவன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்தபின் அவர்கள் நினைவாக எடுக்கப்படும் நினைவு கல் சதிக்கல் எனப்படுகிறது. இதில் கணவருடன் மனைவியும் இருப்பது போல் சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதனை காட்ட கை உயர்த்தி இருப்பது போன்று அதில் வளையல் உள்ளிட்ட அணிகலன்கள் அணிந்தவராகவும் காணப்படுவாள்.

தீயில் பாய்ந்து உயிர்விடுவது போன்ற சிற்பம் செதுக்கும் வழக்கம் இல்லை. இத்தகைய சதிக்கல் கோயில்களை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைப்பது வழக்கம். மாலை, சதி என்ற சொற்களுக்கு பெண் என்ற பொருள் உண்டு. அந்த காலகட்டத்தில் உடன்கட்டை ஏறி இறந்து போன பெண்களை தெய்வமாக போற்றி வணங்கினர். கணவன் மீது கொண்ட அன்பினாலோ பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் காணப்பட்டது.

தற்போது தென்னமநல்லூர் கிராமத்தில் ஊரின் கிழக்கு பகுதியில் நீரோடை அருகே முட்புதரில் புதைந்து இருப்பது ஏழு சதிக்கல்லாகும். இச்சதிக்கல்கள் 3 அடி உயரமு் 1.5 அடி அகலமும் கொண்டவையாக காணப்படுகிறது. கற்சிலை மேல் கூடாரம் அமைப்பு சாய்வாகவும், முக்கோண வடிவமாகவும், வட்ட வடிவமாகவும் காலத்திற்கேற்ப மாறுபடுகின்றன. மொத்தம் ஏழு சதிக்கல் இருக்கின்றன.

பொதுவாக இந்த சிற்பங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் சிற்ப வடிவத்தில் ஆணின் உருவம் வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடக்கி வீரன் என்பதற்காக வலது கையில் வாள் கத்தி போன்றவை பொறிக்கப்பட்டுள்ளது. ஆணின் சிற்பத்தின் அருகே பெண் சிற்பம் அமைந்துள்ளது. பெண் சிற்பம் இடது காலை தொங்கவிட்டும் வலது காலை மடக்கியும் தனது வலது கையில் எலுமிச்சம்பழத்தை மடக்கிப்பிடித்தும் இருப்பதால் அந்த பெண் சுமங்கலி என்ற அர்த்தத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற வடிவம் ஒரே இடத்தில் ஏழு சிற்பங்களில் காணப்படுகிறது’’என்றார்.

The post கள்ளிக்குடி அருகே தென்னமநல்லூரில் 400 ஆண்டுகள் பழமையான ஏழு கற்சிற்பம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : South Madamanallur ,Kullikudi ,Thirumangalam ,Tendamanallur ,South Manalore ,
× RELATED திருமங்கலம் அருகே தடுப்புச்சுவரில் மோதி லாரி விபத்து