×

திருமுருகன்பூண்டி நகராட்சியில் பரபரப்பு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து திருநங்கைகள் போராட்டம்

திருப்பூர் : குடிநீர் இணைப்பை துண்டித்ததை கண்டித்து, திருநங்கைகள் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமுருகன்பூண்டி நகராட்சி 19வது வார்டுக்கு உட்பட்ட கானாக்காடு தோட்டம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு போடப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், நகராட்சி கமிஷனர் அப்துல் ஹாரிஸ் நேற்று முன்தினம் அங்கு சென்று குடிநீர் இணைப்பை துண்டித்து நடடிக்கை மேற்கொண்டார்.

இதனால் பாதிப்புக்குள்ளான திருநங்கைகள் நேற்று காலை திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், அவர்கள் 11-வது வார்டு கவுன்சிலர் லதா தலைமையில், நகராட்சி கமிஷரை சந்தித்து குடிநீர் இணைப்பை எப்படி துண்டிக்கலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேசிய கமிஷனர் முறைகேடாக இணைப்பு கொடுக்கப்பட்டதாக தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது, பேசிய கவுன்சிலர் லதா, திருநங்கைகளின் குடிநீர் தேவைக்காக அப்போதைய கலெக்டரிடம் அனுமதி பெற்று தான் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும். இல்லைனெ்றால், மாவட்ட கலெக்டரிடம் சென்று முறையிடுவோம் என தெரிவித்தார்.

இதற்கு கமிஷனர், கலெக்டரிடம் அனுமதி பெற்று இணைப்பு கொடுத்தது தனக்கு தெரியாது என்றும், முறைகேடாக இணைப்பு கொடுக்கப்பட்டதாக தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், உடனடியாக மீண்டும் இணைப்பு வழங்கப்படும் என உறுதியளித்தார். இதனால் சமாதானம் அடைந்த திருநங்கைகள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post திருமுருகன்பூண்டி நகராட்சியில் பரபரப்பு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதை கண்டித்து திருநங்கைகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Transgender ,Thirumuruganbudi ,Thiruppur ,Thirumuruganbuundi ,
× RELATED சென்னை அடையாறில் வங்கதேச நாட்டைச்...