×

வடகொரியா அரசு மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை; ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததால் பரபரப்பு.. கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு..!!

வடகொரியா: கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்க படைகள் உடனான போர் ஒத்திகைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் அமெரிக்கா, தென்கொரியா ராணுவங்கள் ஒன்றிணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம்சாட்டியது. வடகொரியா வான்வெளிக்குள் நுழையும் அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை தங்கள் கடல் எல்லைக்குள் விழுந்ததாக கூறியுள்ள ஜப்பான், வடகொரியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லிதுவேனியா சென்றுள்ள ஜப்பான் பிரதமர், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுடன் இது தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளதாகவும் ஜப்பான் கூறியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் ஜப்பான் கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில் வடகொரியா நடத்தியிருக்கும் ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

The post வடகொரியா அரசு மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை; ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததால் பரபரப்பு.. கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : North Korea's Govt ,Japan ,peninsula ,North Korea ,US ,Korean peninsula ,Government of North Korea ,Dinakaran ,
× RELATED வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது;...