×

விலை உயர்வால் திருடுகிறார்கள் தக்காளி தோட்டத்திற்கு இரவு- பகலாக காவல்

*விவசாயிகள் கண்காணிப்பு

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளியில், விலை உயர்வு எதிரொலியால் தக்காளி தோட்டத்தில் விவசாயிகள காவல் காத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி உற்பத்தி அதிகரிப்பால் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், வியாபாரிகள் தக்காளியை வாங்க முன் வரவில்லை. ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் வாங்க ஆளில்லாததால் விவசாயிகள் தக்காளிகளை ஏரியில் உள்ள மீன்களுக்கு இறையாக கொட்டினர். இந்நிலையில், தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இதனால், தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து மேட்டுபுலியூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தக்காளி விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் விவசாய தோட்டத்திற்கே நேரில் வந்து ஒரு கிலோ தக்காளியை ₹60க்கு வாங்கிச் சென்று வெளி மார்க்கெட்டில் கிலோ ₹100க்கு விற்பனை செய்கின்றனர். இதனால் எங்களுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.

தக்காளி விலை உயர்ந்துள்ள காரணத்தால் மர்ம கும்பல் தோட்டத்தில் புகுந்து இரவு நேரத்தில் தக்காளிகளை திருடிச் செல்கின்றனர். இதனால் பகல் நேரங்களில் பெண்களும், இரவு நேரங்களில் ஆண்களும் தக்காளி தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆனாலும் சில சமயங்களில் கண் அசந்து தூங்கும் போது தோட்டத்தில் புகுந்து சிலர் தக்காளிகளை திருடிச் சென்று விடுகின்றனர் என்றனர்.

The post விலை உயர்வால் திருடுகிறார்கள் தக்காளி தோட்டத்திற்கு இரவு- பகலாக காவல் appeared first on Dinakaran.

Tags : Pochampally ,Krishnagiri ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்