×

திம்பம் அருகே பலத்த சூறாவளி சாலை நடுவில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்கள்

*2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் அருகே பலத்த சூறாவளி காற்றுக்கு சாலையின் குறுக்கே மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால், தமிழக-கர்நாடக மாநிலங்கள் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி திம்பம் மலை உச்சியில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

காற்றின் வேகம் தாங்காமல் சாலையோர வனப்பகுதியில் இருந்த மூங்கில் மரங்கள் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்த ஆசனூர் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூங்கில் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரங்கள் அதிக அளவில் சாலையில் விழுந்ததால் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி டிராக்டர் மூலம் மூங்கில் மரங்களை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 2 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையின் குறுக்கே மூங்கில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில், அடர்ந்த வனப்பகுதியில் மூங்கில் மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்திய ஆசனூர் தீயணைப்பு துறை வீரர்களுக்கு வாகன ஓட்டிகள், பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

The post திம்பம் அருகே பலத்த சூறாவளி சாலை நடுவில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்கள் appeared first on Dinakaran.

Tags : Thimpham ,Sathyamangalam ,Thimbum ,Mysore National Highway ,Dinakaran ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை