×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பறிமுதல் செய்த செல்போன்களை விசாரணைக்காக கேட்கும் சிபிசிஐடி: ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்க கேட்டு ஊட்டி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017 ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இது தொடர்பாக, சோலூர் மட்டம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளை கும்பலுக்கு தலைமை வகித்த சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 6 ஆண்டுகளாக இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையை துவக்கி பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கு விசாரணை தற்போது வேகம் எடுத்துள்ள நிலையில், கூடுதல் எஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் நேற்று ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல்காதரிடம் மனுதாக்கல் செய்தனர். அதில் இந்த வழக்கில் தொடர்புடையவரும், சாலை விபத்தில் உயிரிழந்தவருமான கனகராஜ் பயன்படுத்திய செல்போன், அவரது சகோதரர் தனபால் மற்றும் குற்றவாளிகள் பயன்படுத்திய 8 செல்போன்களை விசாரணைக்காக தங்களிடம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். அந்த செல்போன்கள் சிபிசிஐடி வசம் வந்தால், அதில் உள்ள பதிவுகளை கொண்டு மேலும் விசாரணையை சிபிசிஐடி போலீசார் துரிதப்படுத்துவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பறிமுதல் செய்த செல்போன்களை விசாரணைக்காக கேட்கும் சிபிசிஐடி: ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : CPCIT ,Kodanadu ,Feedi ,Feeder ,CBCID police ,Eodi ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...