×

அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் செந்தில் பாலாஜியை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கதுறைக்கு இல்லை: ஐகோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்

சென்னை: செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த மட்டுமே அமலாக்க துறைக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதே தவிர, ஆதாரம் இல்லாமல் கைது செய்ய அதிகாரம் தரவில்லை என்று செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. மேகலா தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் பரணிகுமார் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘‘செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத் துறையினரால் கைது செய்ய முடியும். கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களை தெரிவித்து நீதிமன்ற காவலில் வைக்க கோரலாம். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம்’’ இல்லை என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளபோது, ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும். நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத் துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்’’ என்று கேட்டார். அதற்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பதிலளித்து வாதிடும்போது, ஆட்கொணர்வு மனு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுவார் என்றார்.

செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் நீதிமன்ற காவலில் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், மறுநாள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்தது குறித்து உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட எவரும் நீதிமன்ற நடைமுறைகளை விரக்தியடையச் செய்ய முடியாது என்று அமலாக்கத் துறை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது தவறானது.

காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத் துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை. அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் விசாரிக்க முடியவில்லை என்றால் அதை எதிர்த்து அமலாக்கத் துறை உயர் நீதிமன்றத்தைத்தான் நாடியிருக்க வேண்டும். மருத்துவர்களிடம் சொல்லி உரிய ஏற்பாடுகளுடன் விசாரணை நடத்தி இருக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற நிலையில், காவலில் எடுக்காததால், முதல் 15 நாட்களை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என்று அமலாக்கத் துறை கோர முடியாது’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு ஏதேனும் தடை இருந்ததா’ என்று கேட்டார்.

அதற்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘எந்த தடையும் இல்லை. மருத்துவர்களே விசாரணை நடத்த அனுமதித்ததாக அமலாக்கத் துறை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்க கூடாது என்று நீதிபதி நிஷாபானுவும், தங்கள் காவலில் வைத்து விசாரிக்க கோரி அமலாக்க துறை அமர்வு நீதிமன்றத்தை அணுகியது குறித்து நீதிபதி பரத சக்கரவர்த்தியும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை காவல்துறையே அல்ல என்ற நிலையில், சட்ட அதிகாரம் இல்லாத நிலையில் காவல் துறை அதிகாரி போல கருதி செயல்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் நீதிபதி நிஷா பானுவின் தீர்ப்பு சரியானது’’ என்று வாதிட்டு தனது வாதத்தை நிறைவு செய்தார்.

இதை தொடர்ந்து ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர், ‘‘செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது எனத் தெரிவித்துள்ளனர். செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின், நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை நிராகரித்த அமர்வு நீதிமன்ற நீதிபதியின் நடைமுறை சரியானதல்ல என்றார். அப்போது நீதிபதி, கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை வழங்கியபோது, அதை செந்தில் பாலாஜி பெற மறுத்தது ஏன்? கைது நடவடிக்கை சட்டத்தை மீறி மேற்கொள்ளப்பட்டிருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கூண்டில் ஏற்றி அதற்கான இழப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

தொடர்ந்து வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணங்கள் மின்னஞ்சலில் அனுப்பிய பிறகு திருத்தப்பட்டுள்ளன. இதில் முறைகேடு நடந்துள்ளது.அதாவது அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்று அமர்வு நீதிபதிக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்க கூடாது என்றார். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், அமலாக்க துறை காவலில் எடுத்திருந்தால் தான் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும் என்றார்.

தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்று அமர்வு நீதிமன்றத்துக்கு மின்னஞ்சலில் அனுப்பிய மனுவை மனுதாரர் தரப்புக்கு வழங்கவில்லை என்று வாதிட்டார். மேகலா தரப்பு வாதம் முடிவடையாததையடுத்து, வழக்கின் விசாரணை நாளையும் (இன்று) தொடரும் என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார். இதையடுத்து, இன்று மீண்டும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடவுள்ளார். அதை தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடவுள்ளார்.

The post அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் செந்தில் பாலாஜியை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கதுறைக்கு இல்லை: ஐகோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Kapil Sibal ,ICourt ,CHENNAI ,Enforcement Department ,
× RELATED வங்கியிலிருந்து அசல் ஆவணங்கள்...