×

முடக்கு வாத நோய்களை விரட்டும் வாதநாராயணன் கீரை!

நன்றி குங்குமம் டாக்டர்

முடக்குவாத நோய்களை தீர்க்க கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. வாதநாராயணன் இலைகள், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. ஆதிநாராயணன், வாதரசு, வாதமடக்கி போன்ற பெயர்களாலும் இது குறிப்பிடப்படுகின்றது. தமிழகமெங்கும், கிராமங்களில், வேலிகளில், சாலையோரங்களில் வளர்க்கப்படுகின்றது. ரயில் நிலையங்களின் பாதையோரங்களிலும் இவை பரவலாகக் காணப்படும். இதன் இலை, பட்டை ஆகியவை மருத்துவப் பயன் மிகுந்தவை.

வாதநாராயணன் இலையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், வாதவலி, வீக்கம், கட்டிகள் குணமாகும். வாரம் இரண்டு முறை பயன்படுத்தலாம். மேலும், இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி, வீக்கம், கட்டிகள் மேல் பற்றிட குணமாகும். கை, கால் குடைச்சல், வலி குணமாக வாதநாராயணன் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, தினமும் காலையில் மட்டும் குடித்துவர வேண்டும்.
வாத நோய்களைக் குணமாக்குவதோடு பித்த நீரை அதிகரிக்கும் நாடி நடையைப் பலப்படுத்தும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும், வீக்கத்தைக் கரைக்கும். அதிகமாக உட்கொண்டால் கழிச்சலுண்டாக்கும்.

ருமட்டாய்டு ஆர்த்தரைட்டீஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு காலை நேரத்தில் வலியுடன் மூட்டுகளில் இளஞ்சூடு இருக்கும். இவர்கள் வாத நாராயண இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவந்தால் நோய் தீவிரமும் வலியும் குறைவதை உணரலாம்.காலை வேளையில் எழுந்ததும் வாதநாராயணன் இலையை கடுகு எண்ணெயுடன் கலந்து மைய அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வீக்கம், இளஞ்சூடு உணர்வு தணியும்.

வாத நாராயண இலையை நீரில் ஊற வைத்து அந்த நீரை மூட்டுகள் இருக்கும் இடங்களில் பொறுமையாக ஊற்றி வந்தால் குடைச்சல் குறையும். மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு தக்க நிவாரணி வாதநாராயணன் கீரை. இந்த வாதநாராயணன் கீரைக் குழம்பை செய்து சாப்பிட்டு வந்தால், பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக அமையும்.மழைக்காலம், வெயில்காலம் என்று எல்லா நேரங்களிலும் சாப்பிடலாம். நரம்புகளை பலப்படுத்தும். கை, கால் முடக்கத்தை போக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும். மூட்டு வலிக்கு சிறந்த வலி நிவாரணி, மலக்கட்டை நீக்கி, குடலை சுத்தப்படுத்தும்.

தொகுப்பு: பா.பரத்

The post முடக்கு வாத நோய்களை விரட்டும் வாதநாராயணன் கீரை! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Vada Narayanan ,
× RELATED டூர் போறீங்களா?