×

ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருமலை: ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது. இதையொட்டி 6 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, யுகாதி (தெலுங்கு வருடபிறப்பு) மற்றும் ஆனிவார ஆஸ்தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முந்தைய செவ்வாய்கிழமைகளில் கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் (தூய்மைப்பணி) செய்வது வழக்கம். அதன்படி வரும் 17ம்தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. ஆனி வார ஆஸ்தானம் என்பது ஏழுமலையான் சன்னதியில் வரவு-செலவு கணக்கு ஒப்படைக்கும் நிகழ்வாகும். ஆண்டுதோறும் தேவஸ்தானம் சார்பில் தனியாக பட்ஜெட் வெளியிட்டாலும், ஆனி மாதத்தில் நடத்தப்படும் இந்த பழமையான நடைமுறை பல ஆண்டுகளாக தொடர்கிறது.

இதனை முன்னிட்டு இன்று காலை 6 மணியளவில் தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி முன்னிலையில் கோயில் கருவறையை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. அப்போது தங்க கொடிமரம், கருவறை கதவுகள் மற்றும் கோயில் சுவர்கள் மீது பச்சைக்கற்பூரம், கிச்சலிகிழங்கு, மஞ்சள், குங்குமம், திருச்சூரணம் மற்றும் மூலிகை திரவியங்கள் ஆகியவை சேர்ந்த கலவையை கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. முன்னதாக கருவறையில் ஏழுமலையான் மீது பட்டு துணியால் போர்த்தப்பட்டது. திருமஞ்சனம் முடிந்ததும் புதிய பட்டு வஸ்திரம் கொண்டு வந்து ஏழுமலையானுக்கு சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை என 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பகல் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று சிபாரிசு கடிதம் மூலம் விஐபி தரிசனம், அஷ்டதளபாத பத்மாரணை சேவை டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* ரூ.5.11 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 64,347 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,358 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.5.11 கோடி காணிக்கை செலுத்தியிருந்தனர். இன்று காலை நிலவரப்படி கியூ காம்ப்ளக்சில் உள்ள 20 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் 20 மணி நேரம் கழித்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

The post ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Alvar Thirumanjanam Tirupati Eyumalayan Temple ,Alvar ,Thirumanjanam ,Tirupati Eyumalayan Temple ,Anivara Asthana ,
× RELATED குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்