×

குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்

ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள், வைணவ சம்பிரதாயத்தில். குலசேகர ஆழ்வாருக்கு அந்த ராமச்சந்திர மூர்த்தியின் மீது அப்படி ஒரு பக்தியும் பரிவும் இருந்தது.

ராமனை தம் பாசுரங்களின் வழி தாலாட்டி, சீராட்டி, அந்த ராமன் அழுதால், தாமும் அழுதும், ராமன் சிரித்தால் தாமும் சிரித்தும் என்று ராமனோடு தாமே தம் பாசுரங்களின் வழி வாழ்ந்தவர் என்பதால், ராமரை எப்படி பெருமாள் என்று அழைக்கிறோமோ அப்படி ராமரோடு தம் பாசுரங்களின் வழி இணைந்த குலசேகர ஆழ்வாரை, குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம். ராமருக்கு, “மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே” என தாலாட்டு பாசுரங்களை பாடி, அந்த முகுந்தனுக்கு “முகுந்த மாலை”யின் வழி பக்தி மாலை சூட்டி, “படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே” என ஏழுமலையானிடம் “பெருமாள் திருமொழியின்” வழி விண்ணபித்து பக்தி ரசம் சொட்ட சொட்ட தம் பாசுரங்களின் வழி நம்மை பெருமாளிடம் சேர்த்து வைத்து கொண்டிருப்பவர் குலசேகர ஆழ்வார்.

அரசனாக இருந்து ஆட்சி புரிந்து கொண்டிருந்த குலசேகர ஆழ்வாருக்கு, தாம் பெருமாளுக்கு தொண்டனாக இருந்து தொண்டு (கைங்கர்யம்) செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. அடியவர்களோடு அடியவனாக இருந்து கொண்டு அரங்கனை சேவிக்க வேண்டும், அவனுக்கு சேவை செய்ய வேண்டும். எனக்கு ராஜ்யம் வேண்டாம், ரங்கராஜனின் அனுகிரஹம்தான் வேண்டும் என தவித்துதவித்து குலசேகர ஆழ்வார் சாதித்ததுதான் “பெருமாள் திருமொழி”.

பகவான் படைத்த இந்த ஐம்புலன்களையும் கொண்டு அவனை நாம் பூஜிக்க வேண்டும், அவன் திருநாமத்தை ஜபிக்க வேண்டும், கைகள் கொண்டு மலர்கள் பறித்து அவன் திருவடிகளில் அப்பூக்களை சமர்ப்பிக்க வேண்டும். கால்கள் கொண்டு அவன் கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும் என்று ஆழ்வார் அழகாய் நாம் பெருமாளை அடைய சுலபமான வழியை தம் “பெருமாள் திருமொழி”யின் பாசுரங்களின் வழி நமக்கு சொல்லி தருகிறார்.

“கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என் கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே” என்று “பெருமாள் திருமொழி”யின் முதல் பாசுரத்திலேயே அந்த தன் கண்கள் இருக்கும் பயன் என்ன தெரியுமா? அது என்று திருவரங்கம் சென்று அந்த அரங்கனை பார்க்குமோ.. அன்றுதான் இந்த கண்கள் படைத்ததற்கே பயன் என்கிறார். திருவித்துவக்கோட்டு பெருமாளை நோக்கி, “பெருமாளே நான் உன்னைதான் சரண் அடைந்திருக்கிறேன். நீதான் எனக்கு அருள் புரிய வேண்டும். நீ அருள் புரியவில்லை என்றாலும், உன்னைவிட்டு நான் போகவே மாட்டேன் என்று மனமுருகி குலசேகர ஆழ்வார் “பெருமாள் திருமொழியில்” பாடிய பாசுரங்கள் நம் கண்களிலிருந்து நிச்சயம் நீரை வரவழைத்து விடும்.

‘‘தரு துயரம் தடாயேல்
உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர்ப்பொழில் சூழ்
விற்றுவக்கோட்டம்மானே
அரிசினத்தால் ஈன்ற தாய்
அகற்றிடினும்
மற்றவள் தன் அருள் நினைந்தே அழும்
குழவி
அதுவே போன்றிருந்தேனே’’

“பகவானே அடியேனுக்கு எத்தனை எத்தனையோ துயரங்களை நீ தந்து கொண்டிருக்கிறாய்’’. அந்த துயரங்களை எல்லாம் பகவானே நீயேதான் மாற்ற வேண்டும். என்னால் என்னை காப்பாற்றி கொள்ள முடியவே முடியாது. உன்னைவிட்டு நான் போகவே மாட்டேன். ஒரு குழந்தை செய்த விஷமத்தனத்தை கண்டு பொறுக்க முடியாமல் அக்குழந்தையின் தாய் அந்த குழந்தையை அடித்துவிட்டாலும், அந்த குழந்தை திரும்பதிரும்ப “அம்மா.. அம்மா..” என்று அழுதுக் கொண்டே எப்படி அந்த தாயின் அன்பிற்கும், பரிவிற்கும் ஏங்கி கொண்டு அந்த தாயிடமே போகுமோ, அப்படிதான் பகவானே.. நானும் உன்னிடம் மட்டுமே வருவேன்” என்பதே அந்த பாசுரத்தின் பொருள். பகவான் இடத்தில் நாம் கொள்ள வேண்டியது நம்பிக்கையும் பக்தியும்தான் என்பதை, தன் பாசுரங்களின் வழிகாட்டிய குலசேகர ஆழ்வாரின் திருவடியை நினைத்துக் கொண்டு, அவர் தம் பாசுரங்களின் வழி, திருமாலின் திருவடியில் சரண் புகுவோம்.

நளினி சம்பத்குமார்

The post குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார் appeared first on Dinakaran.

Tags : Kulasekhara Perumal ,Kulasekhara Alvar ,Alwars ,Perumal ,Alvar ,Thiruvatharam ,Punarbhusa Nakshatra ,Masi ,Kerala ,Alvars ,
× RELATED மார்கழியில் திருப்பாவை நோன்பு