×

வேறு பள்ளிக்கு மாற்றிவிடுவோம் என்றதால் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுமிகள் பத்திரமாக மீட்பு

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியை சேர்ந்தவர் அம்மு (30). இவர் வீட்டு வேலை செய்கிறார். இவரது கணவர் ராஜ் (32). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார். 16 மற்றும் 14 வயது கொண்ட உறவுக்கார சிறுமிகள், இவர்களது வீட்டிற்கு தங்கியுள்ளனர். நேற்று அதிகாலை தம்பதி எழுந்து பார்த்தபோது சிறுமிகள் மூவரையும் காணவில்லை என்றதும் அதிர்ச்சி அடைந்து தேட ஆரம்பித்தனர். அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி புகாரின்படி, பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அம்முவின் மகள் 13 வயது சிறுமி குறும்பு செய்துவந்ததால் வேறு பள்ளியில் சேர்த்து விடுவதாகவும் ஹாஸ்டலில் சேர்த்து விடுவதாகவும் பெற்றோர் கூறியதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன மற்ற இரண்டு சிறுமிகளுடன் சேர்ந்து மூவரும் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியிடம் உள்ள செல்போன் நம்பரை வைத்து பேசின் பிரிட்ஜ் போலீசார் பேசினர். அப்போது அவர்கள் செங்கல்பட்டில் உள்ளதாகவும் தாங்கள் ஹாஸ்டலில் சேரப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார், வாட்ஸ் அப்பில் ஆடியோ மெசேஜ் மூலம் அவர்களுக்கு அறிவுரை கூறி மீண்டும் சென்னைக்கு வரவழைத்தனர். இதன்பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த 3 சிறுமிகளை போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். பின்னர் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மீண்டும் பள்ளிக்கு அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post வேறு பள்ளிக்கு மாற்றிவிடுவோம் என்றதால் வீட்டை விட்டு வெளியேறிய 3 சிறுமிகள் பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Ammu ,Pulyanthoppu KP Park ,Chennai ,Raj ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு