×

திட்டப்பணிகளில் செயற்கை நுண்ணறிவு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஐஐஎம்களில் பயிற்சி

சென்னை: சென்னை மாநகராட்சி திட்டப்பணிகள் மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு ஐஐஎம்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஒரு திட்டத்திற்கான வரலாற்று ஆராய்ச்சி, தரவுகள் சேகரிப்பு, திட்டங்களின் வெற்றி விகிதம், பலன்கள் மற்றும் வளங்கள் வீணடிப்பது போன்ற திட்ட நிர்வாக பணிகளில் தானியங்கியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய முடிவுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தானியங்கி எதிர்செயல் அமைப்புகள், மெய்நிகர் உதவி மற்றும் இயந்திர வழி கற்றல் ஆகியவற்றில் மாநகராட்சியும் செயல்படவுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்த பயிற்சியின் வாயிலாக சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பணிகளின் முன்னேற்றம், பணிகளின் நிலை மற்றும் முடியும் நேரம் உள்ளிட்ட தகவல்களை எழுத்து, குரல் மூலம் பெற முடியும். இந்த பயிற்சிக்காக தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன், கண்காணிப்புப் பொறியாளர் பாலமுரளி உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் ஐஐஎம் ஷில்லாங்கிற்கு சென்றுள்ளனர். மேலும் மூன்று அதிகாரிகள் ஐஐஎம் லக்னோவுக்கு பயிற்சி பெறச் செல்லவுள்ளனர்.

ஷில்லாங்கிற்கு சென்ற அதிகாரிகள் ஐந்து நாள் பயிற்சிக்குப் பிறகு ஜூலை 14ம் தேதி திரும்புவார்கள், லக்னோவுக்கு ஜூலை 24ம் தேதி செல்லும் அதிகாரிகள் ஜூலை 28ம் தேதி திரும்புவார்கள். வரவு செலவுத் திட்டங்களைத் தயாரித்தல், மதிப்பீடுகள், திட்டச் செலவு அதிகரிப்பதைக் கட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்துவது போன்ற சிறந்த வணிக நிர்வாகத்தை புரிந்துகொள்ளவும் இந்த பயிற்சி அதிகாரிகளுக்கு உதவும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தற்போது அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தங்களின் பட்டப்படிப்பு மற்றும் கள அனுபவத்தை மட்டும் நம்பி இருக்க முடியாது. அதிகாரிகள் நவீன முன்னேற்றங்களுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்ய, தற்போதைய திறன்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post திட்டப்பணிகளில் செயற்கை நுண்ணறிவு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஐஐஎம்களில் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : IIMs ,CHENNAI ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல்...