×

நல்ல நடிகை எனப் பெயர் வாங்கணும்! அர்ச்சனாவின் கனவு

ஹீரோயின்… இந்தத் தருணம் எப்படி இருக்கும்ன்னு ஒருமுறையாவது அனுபவிக்கணும்’… கண்களில் கனவுகள் மின்ன பேசுகிறார் அர்ச்சனா ரவிசந்திரன். ஆதித்யா டியில் துவங்கிய பயணம் இதோ சமீபத்தில் வெளியான ‘இமைகளோ’ சிங்கிள் பாடல் வரை இணையத்தில் டிரெண்டாகி வருகிறார். பாந்தமான லுக், அடிக்கடி தாவணியில் புகைப்படங்கள் என அர்ச்சனாவுக்கு சமூக வலைத்தள கிரேஸ் அதிகம். ‘படிச்சது இன்ஜினியரிங், அப்பா ரவிச்சந்திரன். அவருக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி, அம்மா ஜெயந்திக்கு சென்னைதான் சொந்த ஊர். தங்கச்சி பி.ஏ முடிச்சிட்டு , எம்.ஏ படிக்க என்ட்ரன்ஸ் எழுதியிருக்காங்க. அப்பா தமிழ் புரொபசர் அதனாலேயே செம ஸ்ட்ரிக்ட்’… கலகலப்பாக பேசத் துவங்கினார் அர்ச்சனா. ‘வீட்டில் படிப்புதான் எல்லாமே. அதனாலேயே ஸ்கூல் கூட கல்விதான் எல்லாமேன்னு நினைக்கற ஸ்கூலாக தேர்வு செய்து சேர்த்துவிட்டாங்க. அங்கே ஆண்டுவிழா, கல்ச்சுரல் எல்லாம் பெயருக்காகத்தான் நடத்துவாங்க. ஆனாலும் வீட்டிற்கே தெரியாமல் டான்ஸ், ஸ்டேஜ் பெர்ஃபாமன்ஸ் எல்லாம் ஒரு கை பார்ப்பேன். அதுவும் ஒவ்வொரு டைம் அந்த டான்ஸ்க்கு, டிரெஸ் , மேக்கப்ன்னு ஸ்கூலில் பணம் கேட்பாங்க, அதை வாங்கிக் கொடுக்கறது இருக்கே பெரிய டாஸ்க். அதே போல் பொதுவாகவே எது முடியாதுன்னு சொல்றாங்களோ அதை முயற்சிக்கணும்னு நினைப்பேன். அப்படி என்னவோ எனக்கே தெரியாம நடந்த ஆச்சர்யம் 10ம் வகுப்பிலே 491 மார்க்ஸ் வாங்கி மாநிலத்திலேயே 7வது அதிக மதிப்பெண் வாங்கின மாணவியா ஒரு பெயரும் கிடைச்சது.

அதனால் +2வில் நினைச்ச குரூப் கிடைச்சிருச்சு. ஆனால் கொஞ்சம் +1ல் ஜாலியா இருந்திட்டேன். விளைவு +2வில் 1005 மார்க்தான் கிடைச்சது. 10ம் வகுப்பிலே அவ்வளவு மார்க் வாங்கிக் காண்பிச்ச காரணம் என் அப்பா ஒரு 1180 மார்க்காவது வரும்ன்னு நினைச்சிருப்பார் போல. மேலும் பி.ஏ, எம்.ஏ, பி.ஹெச்.டி, அப்பறம் மலர் டீச்சர் மாதிரி புரொபசர் இப்படி எல்லாம் அப்பாவுக்குக் கனவு இருந்திருக்கு. ஆனால் நான் இந்த ‘நண்பன்’ படத்திலே ஒரு டயலாக் வரும். பொண்ணுன்னா டாக்டர், பையன்னா இன்ஜினியர் அப்படின்னு இருந்துச்சு. இதென்னடா ரூல்ஸ் பசங்கதான் இன் ஜினியரிங் படிக்கணுமான்னு நானே என் தலையிலே மண்ண வாரிப் போட்டுக்கிட்டேன். பயங்கர கஷ்டமா இருந்துச்சு. ஒருவழியா புரொபசர் பொண்ணு அரியர் வைக்கக் கூடாதேன்னு ஒரு அரியர் இல்லாம படிச்சு முடிச்சேன். ஸ்கூல் டேய்ஸ்லயே சுட்டி டிவிக்கெல்லாம் கூட சுட்டி விஜே வாய்ப்புக்காக எழுதியெல்லாம் போட்டேன்’ என்னும் அர்ச்சனா வுக்கு மீடியா கனவு ஆதித்யா சேனல் மூலம் நினைவாகியிருக்கிறது.

‘அப்பாவுக்கு அப்போதே தெரியும் எனக்கு மீடியா ஆசை இருக்குன்னு. ஆனாலும் முதலில் படி , அப்பறம் பிடிச்சதை செய்ன்னு சொன்னார். அதனால் படிச்சேன். கல்லூரி நாட்களிலேயே ‘பிளாக் ஷீப்’ யூடியூப் வீடியோவிலே ஒரு சின்ன ரோல் செய்தேன். இப்போ வரைக்கும் அப்பாவுக்குத் தெரியாது. படிக்கும்போதே ஆதித்யா வாய்ப்புக் கிடைச்சது. அங்கே வேலை செய்திட்டு இருக்கும்போதே ஒரு பிரபல சேனலில் சீரியல் வாய்ப்பும் கிடைச்சது. அதிலேயே ரொமான்டிக் காட்சிகளில் நடிச்சப்போ அப்பாவுக்குச் சின்ன வருத்தம். ஆனாலும் சரி இந்தப் பொண்ணு வாழ்க்கை இதுதான்னு முடிவு செய்து , ஒருவழியா படிச்சிடுச்சே அப்படின்னு விட்டுட்டார்’ என்னும் அர்ச்சனா தற்போது ‘இமைகளோ’ என்னும் சிங்கிள் பாடல் மூலம் எங்கும் எதிலும் டிரெண்டிங்கில் இருக்கிறார்’.

‘இமைகளோ’… பாட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. சேனலில் ேவலை செய்யும் போழுதே டோங்லி ஜம்போவை நல்லா தெரியும். அவர் கொண்டு வந்த ஐடியா இது. கிஷென் தாஸ் கான்செப்ட். அனிவீ மியூசிக்கில் இந்தப் பாட்டுதான் என்னுடைய ஹீரோயின் கனவுக்கு முதல் புள்ளியாக பார்க்கறேன். வீட்டிலே தனியாக இருக்கும் பாய்ஃபிரெண்ட் , கேர்ள்ஃபிரெண்டை வர வைக்கிறார். அந்த ரெண்டு பேருடைய ரெண்டு நாட்கள் காதல் சந்தோஷத்திலே ஊரில் இருந்து அப்பா, அம்மா வர்றதையே பாய் ஃபிரெண்ட் மறந்திடுறார். கையும் களவுமா பிடிபடுறாங்க, இந்தத் தருணங்கள்தான் இந்த மொத்தப் பாடலும். பாட்டு செம ஹிட் ஆகிடுச்சு. மேலும் அருள்நிதி சாருடைய ‘டிமாண்டி காலனி 2’ படத்தில் அவருக்கு தங்கச்சியா நடிச்சிருக்கேன், மேலும் என்னுடைய ரோல் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரா இருக்கும். கூடிய சீக்கிரம் ஹீரோயினா நடிக்கணும். அந்த மூமென்ட் எப்படி இருக்கும்னு பார்க்கணும். மத்தப்படி நல்ல நடிகைன்னு பெயர் கிடைச்சாலே போதும்’.

– ஷாலினி நியூட்டன்

The post நல்ல நடிகை எனப் பெயர் வாங்கணும்! அர்ச்சனாவின் கனவு appeared first on Dinakaran.

Tags : Archana ,Archana Ravichandran ,Aditya T ,
× RELATED சிவ்ராஜ் பாட்டீலின் மருமகள் அர்ச்சனா பாஜவில் தஞ்சம்