×

முதல் 15 நாள் முடிந்துவிட்டால் அது முடிந்ததுதான், அதன்பின் கஸ்டடி கோரமுடியாது: ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் 3-வது நீதிபதி கார்த்திகேயன் முன்பு செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில், என்.ஆர்.இளங்கோ வாதம் செய்கின்றனர்.

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு நிலைக்கத்தக்கதா? என்று 3-வது நீதிபதி விசாரணை நடத்துகிறார். சிகிச்சை காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா? முடியாதா? காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்ற அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.

கபில் சிபல் வாதம்: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கை பொறுத்தவரை புலனாய்வை அமலாக்கத்துறை மேற்கொள்கிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்ட விதிகளை விளக்கி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தார். ஒழுங்குபடுத்தும் சட்டவிதிகள், அதிகாரிகளுக்கு காவல்துறையின் அதிகாரம் வழங்கவில்லை. இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் புரிந்ததன் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. ஆதாரங்கள் முழுமையாக இல்லாதபோது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கைது செய்ய முடியாது.

பிஎம்எல்ஏ சட்டப்படி குற்றம் புரிந்திருக்கிறார் என நம்புவதற்கான காரணங்கள், ஆதாரம் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையால் கைது செய்ய முடியும். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் 19-வது பிரிவை சுட்டிக்காட்டி கபில் சிபல் வாதிட்டார். கைது செய்த 24 மணி நேரத்தில் ஆஜர்படுத்தி, சீலிட்ட கவரில் ஆதாரம் சமர்பித்து கைதுக்கான காரணங்கள் தெரிவிக்க வேண்டும். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டப்படி அமலாக்கத்துறை விசாரிக்க முடியுமே தவிர புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது. ஏற்கனவே செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது, அவரது காவல் சட்டவிரோதம் என்று தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி கேள்வி: எந்த ஆவணமும் இல்லாதபோது அமலாக்கத்துறைக்கு எங்கிருந்து ஆதாரம் கிடைத்தது? எந்த ஆதாரமும் இல்லாதபோது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்தது எப்படி? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நிலையில்தான் உள்ளது. நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளபோது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்? என்று நீதிபதி எழுப்பினார். நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கும்படி அமலாக்கத்துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்றும் வினவினார்.

கபில் சிபல் வாதம்: ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுவார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கிடையாது. அமலாக்கத்துறை புலன் விசாரணை நடத்த முடியாது என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தார்.

நீதிபதி கேள்வி: அமலாக்கத்துறையை எவ்வாறு வகைப்படுத்துவது என்று உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார். உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு உள்ள அதிகாரம்போல் தான் அமலாக்கத்துறை அதிகாரம் என்று கபில் சிபல் பதில் அளித்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் பிரிவு 50-ன் கீழ் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது என்றும் குறிப்பிட்டார்.

கபில் சிபல் வாதம்: காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத்துறை அதை ஏன் அமல்படுத்தவில்லை என கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். அமர்வுநீதிமன்ற நிபந்தனையால் விசாரிக்க முடியவில்லை என்றால் அதை எதிர்த்து அமலாக்கத்துறை ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை? என்றும் வினவினார். முதல் 15 நாள் முடிந்துவிட்டால் அது முடிந்ததுதான், அதன்பின் கஸ்டடி கோரமுடியாது என்று தெரிவித்தார்.

 

The post முதல் 15 நாள் முடிந்துவிட்டால் அது முடிந்ததுதான், அதன்பின் கஸ்டடி கோரமுடியாது: ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,iCord ,Chennai ,Minister ,Chennai High Court ,Ikordt ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...