×

வெம்பக்கோட்டை அகழாய்வில் தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்புடன் கூடிய ஆண் பொம்மை கண்டெடுப்பு!!

ஏழாயிரம்பண்ணை: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இங்கு, பொதுமக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக பல்வேறு தொல்பொருள்கள் கிடைத்து வருகின்றன. இதுவரை ஆறு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து சுடுமண் பொம்மை, புகை பிடிப்பான் கருவி, காதணி, எடைக்கல், பதக்கம், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், யானை தந்தத்தால் ஆன பகடை, தக்களி, தங்க அணிகலன், செங்கல், சில்லு வட்டம், கிண்ணம்,சுடுமண்ணால் ஆன கருப்பு, சிவப்பு நிற பானை, கூம்பு,வட்ட வடிவ அகல் விளக்கு உள்ளிட்ட 2500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தொல்லியல்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்துடன் வனையப்பட்டுள்ளது. தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்கப்பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்புடன் கூடிய ஆண் பொம்மை கண்டெடுப்பு!! appeared first on Dinakaran.

Tags : vembakotta ,Vijayagarisalkullum ,Virudhunagar District, Vembakota ,
× RELATED வல்லம்பட்டி பகுதியில் புதர்மண்டி...