காந்திநகர்: ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் முறையாக குஜராத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 11 மாநிலங்களவை எம்பி இடங்கள் உள்ளன. இதில் பாஜ 8 எம்.பிக்களையும் காங்கிரஸ் 3 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. தற்போது 8 பாஜ மாநிலங்களவை எம்.பிக்களில் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், ஜூகால்ஜி தாக்கூர், தினேஷ் அனவாதியா ஆகியோரது பதவி காலம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முடிவடைகிறது.
இதனையடுத்து குஜராத்தில் 3 மாநிலங்களவை இடங்கள் உட்பட நாடு முழுவதும் 10 காலி இடங்களுக்கான தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட ஜெய்சங்கர் நேற்று குஜராத் சட்டசபை வளாகத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தா முன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘மீண்டும் குஜராத்தில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கும், பாஜ மேலிடத்திற்கும், குஜராத் மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
ஆனால், மீதமுள்ள 2 வேட்பாளர்களின் பெயரை பாஜ இன்னும் அறிவிக்கவில்லை. குஜராத் சட்டப்பேரவையில் போதுமான பலம் இல்லாத காரணத்தால் 3 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கு போட்டியிடப் போவது இல்லை என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வேட்புமனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 13 தேதி. இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக டெரிக் ஓ பிரைன், சுகேந்து ஷேகர் ராய், தோலா சென், புதுமுகங்களாக சமிருல் இஸ்லாம் பிரகாஷ் சிக் பரைக், சாகேத் கோகலே ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
The post குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் ஜெய்சங்கர் மனு தாக்கல் appeared first on Dinakaran.

