×

முதல் மனைவிக்கு தெரியாமல் இளம்பெண்ணை கடத்தி டும்..டும்..38 வயது தேமுதிக பிரமுகர் கைது: மேலும் பல பெண்களுடன் தொடர்பு?

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே 18 வயது இளம்பெண்ணை காதல் வலை விரித்து கடத்தி 2வது திருமணம் செய்த 38 வயது தேமுதிக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் தோட்டவரம்பு பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் விஜின் குமார் (38). முதலில் மினி பஸ் டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உண்டு. இவரது மினி பஸ்சில் சாமியார்மடத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் அடிக்கடி பயணம் செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மினி டிரைவர் வேலையை விட்டு சொந்த ஆட்டோ ஓட்டியுள்ளார். ஆட்டோவிலும் இளம்பெண்ணை பல இடங்களுக்கு அழைத்து சென்று காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். அந்த பெண்ணின் பெற்றோருடனும் பழகியுள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கு முன் அவர்களிடம் உங்கள் மகளுக்கு கேரளாவில் கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலை வாங்கி தருகிறேன். என்னுடன் அனுப்புங்கள் எனக்கூறியுள்ளார். அதை நம்பிய பெற்றோரும் சம்மதித்துள்ளனர். ஆனால் இளம்பெண்ணை கேரளாவுக்கு அழைத்து சென்ற விஜின் குமார், அவருக்கு வேலை எதுவும் வாங்கி தராமல் 2வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாத நிலையில் திருமணமாகாதவர் போல விஜின்குமாருக்கு, மேக்காமண்டபம் செம்பருத்திவிளையை சேர்ந்த லிவிங்லைட் சபை போதகர் பிரின்ஸ் உள்பட 3 பேர் போலி சான்றிதழ் பெற்றுத்தந்தார்களாம். பின்னர் அந்த பெண்ணுடன் கேரளாவில் குடித்தனம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இளம்பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லை எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் 6 சட்டபிரிவுகளில் விஜின்குமார், போலி திருமணச் சான்று வழங்கிய போதகர் பிரின்ஸ், உதவி புரிந்த களியலை சேர்ந்த சிவக்குமார், கொடுங்குளத்தை சேர்ந்த சுரேஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தகவல் அறிந்ததும் விஜின் குமார் இளம்பெண்ணுடன் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா சென்றனர். இதையறிந்து அங்கிருந்தும் தப்பி சென்னை உள்பட பல இடங்களுக்கு சென்ற விஜின் குமார் கடைசியாக வேளாங்கண்ணிக்கு சென்று லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருக்கிறார். இதுதெரிந்து தனிப்படை போலீசார் வேளாங்கண்ணி சென்று, லாட்ஜில் தங்கி இருந்த விஜின்குமாரையும் இளம்பெண்ணையும் 8ம் தேதி மடக்கி, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்குப்பின் அவர்கள் விஜின் குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இளம்பெண் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் விஜின் குமாருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் பயன்படுத்திய ஆண்ட்ராய்டு செல்போன்களில் அவர் யார் யாருடன் தொடர்பு வைத்து இருந்தார் என்ற தகவல்கள் அனைத்தும் இருப்பதாக முதல் மனைவி கூறியுள்ளார். ஆனால் போலீசார் அந்த செல்போன்களை பறிமுதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அவற்றை கைப்பற்றினால் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

The post முதல் மனைவிக்கு தெரியாமல் இளம்பெண்ணை கடத்தி டும்..டும்..38 வயது தேமுதிக பிரமுகர் கைது: மேலும் பல பெண்களுடன் தொடர்பு? appeared first on Dinakaran.

Tags : Marthandam ,Dinakaran ,
× RELATED பெருமாள்புரத்தில் கூலிப்படை...